உள்ளூர் செய்திகள்
சொந்த ஊர் திரும்பிய மாணவர் அஜித்ராஜ் பெற்றோருடன் இருப்பதை படத்தில் காணலாம்.

மருத்துவ படிப்பை தொடர்ந்திட அரசு உதவிட வேண்டும்

Published On 2022-03-07 15:50 IST   |   Update On 2022-03-07 15:50:00 IST
ஏழை, எளிய மாணவர்கள் மருத்துவ படிப்பை தொடர்ந்திட அரசு உதவி செய்ய வேண்டும் என்று உக்ரைனில் இருந்து திரும்பிய கறம்பக்குடி மாணவர் கேட்டுக்கொண்டார்.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே உள்ள ஓடப்பவிடுதி கிராமத்தை சேர்ந்தவர் துரைராஜ்-ஆனந்தி தம்பதியின் மகன் அஜிஜ்ராஜ் (வயது 21). இவர் உக்ரைனில் உள்ள வினிசியா பிரிக்கோ மெமோரியல் பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு மருத்துவ படிப்பு படித்து வந்தார்.

இந்நிலையில் அங்கு போர் காரணமாக உக்ரைனில் தவித்து பின்னர் ருமேனியா வந்தடைந்த அவரை மத்திய அரசு மீட்டு இந்தியாவுக்கு அழைத்து வந்தது. டெல்லி வந்தடைந்த அவர் தமிழக அரசின் ஏற்பாட்டில் நேற்று மாலை சொந்த ஊருக்கு திரும்பினார். 

அவரை பெற்றோர் மற்றும் உறவினர்கள் கண்ணீர்மல்க வரவேற்றனர். பின்னர் அஜித்ராஜ் கூறியதாவது:

ரஷ்யா&உக்ரைன் போர் தொடங்கியதில் இருந்தே மிகவும் அச்சத்துடன் தவித்தோம். அங்கு மிகவும் புகழ்பெற்ற நூற்றாண்டு பழமைமிக்க கல்லூரியில் படித்ததால் பாதுகாப்பாக இருந்தோம்.

இருப்பினும் விமானங்கள் பறக்கும் சத்தமும், அடிக்கடி அபாய சங்கு ஒலியும் பெரும் பதற்றத்தை  தந்தது.  இரவு நேரங்களில் தூக்கமின்றி தவித்தோம். உணவு கிடைப்பதும் பெரும் சிரமமாக இருந்தது. கடந்த 4 நாட்களுக்கு முன்பு எங்கள் பல்கலைக்கழகத்தின்  சார்பாக வாகனம் ஏற்பாடு செய்து ருமேனியா சென்றடைந்தோம்.

அங்கு இந்திய தூதரகஅதிகாரிகள் உணவு மற்றும் தங்குமிடம் ஏற்பாடு செய்து கொடுத்தனர். பின்னர் நேற்று முன்தினம் இந்திய விமானத்தின் மூலம் டெல்லி வந்தடைந்தோம். அங்கிருந்து தமிழக அரசின் ஏற்பாட்டின் பேரில் சொந்த சென்னை வந்து பின் சொந்த ஊர் திரும்பினேன்.

எங்ளை பத்திரமாக மீட்டு வந்த மத்திய, மாநில அரசுகளுக்கு நன்றி கர்நாடகாவை சேர்ந்த மாணவர் உணவு வாங்க சென்றபோது குண்டு பாய்ந்து கொல்லப்பட்டது எங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் மரண பயத்தில் தவித்தோம்.  தற்போது மறுபிறவி எடுத்து வந்ததுபோல் உள்ளது.

ஏழ்மையான  சூழவில் மருத்துவ கனவை நிறைவேற்ற உக்ரைன் சென்ற என்னை போன்ற மாணவர்கள் மருத்துவ படிப்பை தொடர அரசு உதவிசெய்ய வேண்டும்.  மேலும் அங்கு சிக்கியுள்ள அனைத்து மாண வர்களையும் மீட்டு வரவேண்டும் என்றார்.

Similar News