உள்ளூர் செய்திகள்
வாலாஜா அரசு கல்லூரியில் ஊட்டச்சத்து உணவு குறித்து விழிப்புணர்வு கண்காட்சி
வாலாஜா அரசு கல்லூரியில் ஊட்டச்சத்து உணவு குறித்து விழிப்புணர்வு கண்காட்சியை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
வாலாஜா
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அறிஞர் அண்ணா அரசு மகளிர் கலைக் கல்லூரியில் மகளிர் திட்டம் சார்பில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 7 வட்டாரங்களுக்கு உட்பட்ட மகளிர் குழுக்களில் ஊட்டச்சத்து உணவு கண்காட்சியை மாணவர்கள் பார்வையிடுவது. இதனை வைக்கப்பட்டிருந்ததை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
இந்த கண்காட்சியில் மகளிர் குழுக்கள் பிரத்தியேகமாக செய்து கொண்டு வந்திருந்த ஊட்டச்சத்து உணவு பொருட்களையும், பழங்கள், காய்கறிகளையும் பார்வையிட்டார். மகளிர் குழுக்கள் கோலங்கள் மூலம் பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்திருப்பதையும் பார்வையிட்டார்.
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பாக ஏற்கனவே நடத்தி முடித்த வட்டார அளவில் நடைபெற்ற ஊட்டச்சத்து உணவு கண்காட்சிகளில் வெற்றி பெற்றவருக்கு பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வழங்கினார். நிகழ்ச்சியில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பேசியதாவது:&
இந்த வேகமான உலகத்தில் பொதுமக்கள் நம் முன்னோர்களின் உணவு பழக்கத்தை கைவிட்டு தற்போதைய உணவுப் பழக்க வழக்கத்தை நவீன பழக்கம் வழக்கம் என நினைத்து பல்வேறு விதமான உடலுக்கு ஒத்துப்போகாத தீங்கு விளைவிக்கும் உணவுப் பழக்கங்களோடு வாழ்ந்து வருகின்றனர்.
ஏனென்றால் அவர்களின் இன்றைய வேகமான வாழ்க்கை மற்றும் வேலையின் காரணமாக உணவு பழக்கவழக்கமும் மாறிக்கொண்டு வருகிறது. ஆனால் இது ஆரோக்கியமான உடலுக்கு வழிவகுக்காது. நம்முடைய முன்னோர்கள் கடைபிடித்த உணவு பழக்கவழக்கங்கள் மிகவும் ஆரோக்கியமானது.
ஊட்டச்சத்து குறைபாட்டினால் அதிக அளவு பெண்கள் பாதிக்கப்படுகின்றனர்.பெண்களுக்கு ரத்தசோகை பாதிப்பு ஏற்பட்டு உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் ஊட்டச்சத்து குறைபாடுதான். பெண்கள் கர்ப்ப காலத்தில் அதிகப்படியான ஊட்டச்சத்து உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் வெப்ப காலங்களில் குளிர்பானங்கள் குடிப்பதை தவிர்த்து மோர், இளநீர் போன்ற இயற்கை பானங்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்த தலைமுறையினர் நல்ல ஆரோக்கியத்துடன் வளர கல்லூரி மாணவிகள் இதைப் பார்த்து புரிந்துகொண்டு பின்பற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் மகளிர் திட்ட அலுவலர் நானில தாசன், உதவி மகளிர் திட்ட அலுவலர்கள் ஷாகுல் ஹமீத், சுபாஷ் சந்திரன், கல்லூரி முதல்வர் பொறுப்பு சுஜாதா ஆகியோர் கலந்து கொண்டனர்.