உள்ளூர் செய்திகள்
டாக்டர் விஜயகுமார்

தமிழக மாணவர்களை மீட்க உதவியது எப்படி?- ராணிப்பேட்டை டாக்டர் பேட்டி

Published On 2022-03-07 07:54 IST   |   Update On 2022-03-07 07:54:00 IST
உக்ரைனில் சிக்கிய மாணவர்களை மீட்க தமிழக அரசுக்கு உதவியது குறித்து ராணிப்பேட்டை டாக்டர் விஜயகுமார் பேட்டி அளித்துள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா தாலுகா எடப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் டாக்டர் விஜயகுமார். உக்ரைன் மருத்துவ பல்கலைக்கழகத்தில் படித்து தற்போது வாலாஜாவில் கிளினிக் நடத்தி வருகிறார்.

உக்ரைனில் சிக்கிய தமிழக மாணவர்களை மீட்க தமிழக அரசுக்கு இவர் உதவி செய்துள்ளார்.

இதுகுறித்து டாக்டர் விஜயகுமார் நிருபரிடம் கூறியதாவது :-

நான் கடந்த 2018-ம் ஆண்டு உக்ரைன் நாட்டில் உள்ள வின்னிஸ்டியாவில் மருத்துவ படிப்பை முடித்துவிட்டு, தற்போது வாலாஜாவில் கிளினிக் நடத்தி வருகிறேன். உக்ரைன் மீது ரஷியா போர் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், நான் படித்த பல்கலைக்கழகத்தில் தற்போது படித்து வரும் 160 தமிழக மாணவர்களின் முழு விவரங்களை சேகரித்தேன். அவர்களை அங்கிருந்து ‌நாட்டின் எல்லை பகுதிகளுக்கு வரவழைக்க பஸ் போக்குவரத்து ஏற்பாடு செய்தேன்.

அதில் 120 பேர் ருமேனியாவுக்கும், 20 பேர் ஹங்கேரிக்கும், மீதமுள்ளவர்கள் மற்ற எல்லை பகுதிகளுக்கும் வந்தடைந்தனர். பின்னர் அங்கிருந்து அவர்கள் மத்திய, மாநில அரசுகள் ஏற்பாடு செய்த விமானம் மூலம் டெல்லிக்கு வந்து, அவரவர் சொந்த ஊருக்கு சென்றடைந்தனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் ஓச்சேரியை சேர்ந்த கண்ணன், வாலாஜாவை சேர்ந்த அனிதா உள்பட 8 பேர் அவரவர் வீட்டிற்கு வந்தடைந்து விட்டனர்.

கார்கிவ் பகுதியில் தமிழகத்தைச் சேர்ந்த 35 மாணவர்கள் சிக்கி தவிப்பதாக தகவல் கிடைத்தது. ருமேனியாவுக்கு பஸ்சில் செல்ல ரூ.38 ஆயிரத்துக்கு மேல் கேட்டுள்ளனர். அந்த தொகையை மாணவர்களால் செலுத்த முடியாது என்பதால் உடனடியாக இந்த தகவலை ‘வாட்ஸ்அப்’ குழுவில் உள்ள அதிகாரிகளுக்கு தெரிவித்தேன்.

அதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட பஸ் நிறுவனத்திற்கு அரசு மூலம் பணம் செலுத்தப்பட்டது. பின்னர் 4-ந் தேதி அவர்கள் 35 பேரும் கார்கிவ்வில் இருந்து பஸ்சில் புறப்பட்டனர். இன்று (நேற்று) அவர்கள் ருமேனியா நாட்டு எல்லைக்கு வந்தடைந்து விடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

டாக்டர் விஜயகுமாரின் இந்த முயற்சியை ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் மற்றும் அதிகாரிகள் வெகுவாக பாராட்டினர்.

Similar News