உள்ளூர் செய்திகள்
திமுக

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி

Published On 2022-03-04 16:03 IST   |   Update On 2022-03-04 16:03:00 IST
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பேரூராட்சி மன்ற தலைவருக்கு சக கவுன்சிலர்கள் மற்றும் கட்சியினர் வாழ்த்து தெரிவித்தனர்.
கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி நகராட்சியில் மொத்தம் 21 வார்டுகள் உள்ளன. நகரசபை தலைவர் தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தல் இன்று நகராட்சி அலுவலகத்தில் நடந்தது.

இதில் கள்ளக்குறிச்சி நகரசபை தலைவர் பதவிக்கு 2வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் சுப்ராயலு மற்றும் 11 வது வார்டு அ.தி.மு.க கவுன்சிலர் பாபு ஆகியோர் மனு தாக்கல் செய்தனர். இதில் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக 16 வாக்குகளும், அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக 5 வாக்குகளும் போடப்பட்டது. அதன்படி கள்ளக்குறிச்சி 2-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் சுப்ராயலு நகர சபை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு நகராட்சி ஆணையாளர் குமரன் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

இதனை தொடர்ந்து மதியம் துணைத்தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெறுகிறது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நகரசபை தலைவருக்கு சக கவுன்சிலர்கள், கட்சியினர் வாழ்த்து தெரிவித்தனர். சுமார் 21 ஆண்டுகளுக்கு பிறகு தி.மு.க நகர சபை தலைவர் பதவியை கைப்பற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தியாகதுருகம் பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. கடந்த மாதம் நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. 14 வார்டுகளிலும், தே.மு.தி.க. 1 வார்டுடிகளிலும் வெற்றிபெற்றனர். இதன் மூலம் அதிக வார்டுகளில் வெற்றிபெற்றதால் தியாகதுருகம் பேரூராட்சியை பெரும்பான்மையுடன் தி.மு.க. கைப்பற்றியது.

இதனை தொடர்ந்து பேரூராட்சி மன்ற தலைவர் தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தல் பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் பேரூராட்சி மன்ற தலைவராக 2வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் வீராசாமி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு பேரூராட்சி செயல் அலுவலர் சீனிவாசன் பதவி பிரமாணம் செய்து வைத்தார். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பேரூராட்சி மன்ற தலைவருக்கு சக கவுன்சிலர்கள் மற்றும் கட்சியினர் வாழ்த்து தெரிவித்தனர்.


Similar News