உள்ளூர் செய்திகள்
விடுதலை சிறுத்தை கட்சியினர் மறியலில் ஈடுபட்ட காட்சி

தி.மு.க. கவுன்சிலர்களை கண்டித்து வி.சி.க.வினர் மறியல்- போலீசாருடன் தள்ளுமுள்ளு-பதட்டம்

Published On 2022-03-04 13:55 IST   |   Update On 2022-03-04 13:55:00 IST
நகராட்சி தலைவர் பதவி தி.மு.க.வுக்கு கிடைக்கும் என்று அக்கட்சியினர் எதிர் பார்த்திருந்தனர். இந்த சூழ்நிலையில் நகராட்சி தலைவர் பதவி விடுதலை சிறுத்தை கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

கடலூர்:

கடலூர் அருகே நெல்லிக்குப்பம் நகராட்சியில் மொத்தம் 30 வார்டுகள் உள்ளது. தற்போது நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க-11, அ.தி.மு.க-3, வி.சி.க-2, ம.தி.மு.க-1, பா.ம.க-1, காங்கிரஸ்-1, தே.மு.தி.க-1, த.வா.க-1, இந்திய யூனியன் முஸ்லிம் லீக்-1, மனித நேய மக்கள் கட்சி-1, சுயேட்சைகள்-7 வெற்றி பெற்றனர்.

நெல்லிக்குப்பம் நகராட்சி தலைவர் பதவி பொதுப்பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணி கட்சி 18 வார்டுகளை கைப்பற்றியது. தனிப்பட்ட முறையில் தி.மு.க. 14 வார்டுகளில் வெற்றிவாகை சூடியது.

எனவே, நகராட்சி தலைவர் பதவி தி.மு.க.வுக்கு கிடைக்கும் என்று அக்கட்சியினர் எதிர் பார்த்திருந்தனர். இந்த சூழ்நிலையில் நகராட்சி தலைவர் பதவி விடுதலை சிறுத்தை கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

நகராட்சி தலைவர் பதவிக்கு அந்த கட்சியின் வேட்பாளராக கிரிஜா திருமாறன் போட்டியிடுகிறார். முன்னதாக விடுதலை சிறுத்தை கட்சிக்கு ஆதரவு கோரி கட்சியின் மாவட்ட செயலாளர் முல்லைவேந்தன், தி.மு.க. கவுன்சிலர்களை சந்தித்து ஆதரவு கேட்டார்.

இந்த நிலையில் இன்று மறைமுக தேர்தல் அறிவிக்கப்பட்டது. முன்னதாக நகராட்சியில் உள்ள 20 கவுன்சிலர்கள் திடீரென மாயமானார்கள். அவர்களது செல்போன் எண்களை தொடர்பு கொள்ள முடியவில்லை.

இன்று காலை தேர்தல் நடப்பதால் வி.சி.க. வேட்பாளர் கிரிஜா திருமாறன் நகராட்சி அலுவலகத்துக்கு வந்தார். நகராட்சி பகுதியில் எந்தவித அசம்பாவித சம்பவமும் நடைபெறாமல் இருக்க 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். வெளிநபர்கள் யாரும் நகராட்சி அலுவலகத்துக்குள் நுழைய அனுமதி கிடையாது. இதற்காக அங்கு தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டுள்ளது.

நகராட்சி ஊழியர்கள் அடையாள அனுமதி அட்டை இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். 200 மீட்டர் தூரத்துக்கு வெளியாட்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. தேர்தல் நடத்தும் அலுவலர் பார்த்தசாரதி தலைமையில் இந்த தேர்தல் நடக்கிறது. இதையொட்டி நகராட்சி வளாகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் போலீசார் தீவிர கண் காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையே நகராட்சி தேர்தலில் வாக்களிப்பதற்காக தி.மு.க. கவுன்சிலர்கள் ஒரு வாகனத்தில் நெல்லிக்குப்பம் நகராட்சி அலுவலகத்துக்கு வந்தனர். அப்போது 100-க்கும் மேற்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அந்த வேனை மறித்தனர். கூட்டணி தர்மத்தின்படி நகராட்சி தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளருக்கே வாக்களிக்க வேண்டும் என்று அவர்கள் கோ‌ஷம் எழுப்பினர்.

சாலையில் வைத்திருந்த இரும்பு தடுப்புகளை எடுத்து வந்து தி.மு.க.வினர் வந்த வேன் முன்பு வைத்து தடுத்தனர். இதனால் அவர்களை போலீசார் அப்புறப்படுத்த முயன்றனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து நகராட்சி அலுவலகம் உள்ள பகுதியில் பதட்டம் நிலவி வருகிறது.

Similar News