உள்ளூர் செய்திகள்
நெல்லிக்குப்பத்தில் பள்ளி வேன் கவிழ்ந்து டிரைவர் பலி- அதிர்ஷ்டவசமாக தப்பிய மாணவர்கள்
நெல்லிக்குப்பத்தில் பள்ளி வேன் கவிழ்ந்த விபத்தில் டிரைவர் பலியான நிலையில் மாணவர்கள் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர்.
கடலூர்:
கடலூர் கம்மியம்பேட்டையில் தனியார் பள்ளி ஒன்று உள்ளது. கடலூர் சுற்று பகுதியில் உள்ள மாணவ-மாணவிகள் இந்த பள்ளியின் வேன் மூலம் அழைத்து வருவது வழக்கம்.
இன்று காலை பள்ளி மாணவர்களை அழைத்து வர நெல்லிக்குப்பம் பகுதிக்கு பள்ளி வேன் சென்றது. கடலூர் குண்டுசாலையை சேர்ந்த பிரபு (வயது 42) என்பவர் வேனை ஓட்டி சென்றார்.
சுமார் 10 மாணவர்களை ஏற்றிக்கொண்டு அடுத்த பகுதிக்கு வேன் சென்றது. நெல்லிக்குப்பம் ராமுவீதியில் வேன் சென்றபோது எதிர்பாராமல் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறியது. ஒரு வீட்டின் சுவரில் மோதி அந்த வேன் கவிழ்ந்தது.
வேனுக்குள் இருந்த பள்ளி மாணவர்களின் அலறல் சத்தம்கேட்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் விரைந்து வந்து வேனின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து மாணவர்களை மீட்டனர். அதிர்ஷ்டவசமாக அவர்களுக்கு காயங்கள் ஏதும் ஏற்படவில்லை.
வேன் டிரைவர் பிரபு மயங்கிய நிலையில் கிடந்தார். அவரை மீட்டு கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் பிரபு ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து நெல்லிக்குப்பம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.