உள்ளூர் செய்திகள்
உயர் நீதிமன்ற மதுரை கிளை

அதிமுக கவுன்சிலர்கள் சுதந்திரமாக வாக்களிப்பதை உறுதி செய்ய வேண்டும்- உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

Published On 2022-03-03 15:39 IST   |   Update On 2022-03-03 15:39:00 IST
பிற கட்சிகளை சேர்ந்த நபர்களை தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிக்கு தேர்வு செய்யும்படி மிரட்டல் வருவதாக அதிமுக கவுன்சிலர்கள் மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.
மதுரை:

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் பேரூராட்சியில் 15 வார்டுகளில் 8 இடங்களில் அ.தி.மு.க. வெற்றி பெற்றதோடு மேலும் ஒரு சுயேச்சை வேட்பாளரின் ஆதரவோடு 9 உறுப்பினர்களின் ஆதரவை பெற்று அ.தி.மு.க. அங்கு தலைவர் பதவியை கைப்பற்றும் நிலையில் உள்ளது.

8 அ.தி.மு.க. உறுப்பினர்கள் மற்றும் சுயேச்சை உறுப்பினர் ஒருவர் என 9 பேரும் தாங்கள் பதவியேற்க வரும் போது போலீசார் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தனர். அதன் அடிப்படையில் அவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். அதன்படி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 8 அ.தி.மு.க. உறுப்பினர்கள் மற்றும் 1 சுயேச்சை உறுப்பினர் ஆகிய 9 பேரும் அன்னவாசல் பேரூராட்சி அலுவலகத்திற்கு வந்து பதவியேற்றனர். 

அதன்பின்னர், பேரூராட்சி தலைவர் மற்றும் துணைத்தலைவர் தேர்தலில் தங்களுக்கு பாதுகாப்பு கேட்டு அதிமுக கவுன்சிலர்கள உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர். பிற கட்சிகளை சேர்ந்த நபர்களை தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிக்கு தேர்வு செய்யும்படி மிரட்டல் வருவதாக மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.

இந்த மனு மீதான விசாரணை முடிந்து இன்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அன்னவாசல் பேரூராட்சியின் அதிமுக கவுன்சிலர்கள் அனைவரும் தலைவர், துணைத்தலைவர் தேர்தலில் சுதந்திரமாக வாக்களிப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Similar News