உள்ளூர் செய்திகள்
கந்தர்வக்கோட்டையில் கூடுதல் பஸ்களை இயக்க அமைச்சர் உத்தரவு
மாணவர்களின் கோரிக்கையை ஏற்று கந்தர்வக்கோட்டையில் கூடுதல் பஸ்களை இயக்க அமைச்சர் ரகுபதி உத்தரவிட்டார்.
புதுக்கோட்டை:
கந்தர்வக்கோட்டையில் இருந்து தஞ்சாவூர் பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக காலை மற்றும் மாலை நேரங்களில் இயக்கப்பட்டு வந்த நகர பேருந்துகள் நிறுத்தப்பட்டது. இதனால் பள்ளி கல்லூரி மாணவர்கள் உரியநேரத்திற்கு கல்வி கூடங்களுக்கு செல்ல முடியாமல் சிரமப்பட்டனர்.
இது குறித்து அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் அமைச்சர் ரகுபதி கந்தர்வக்கோட்டை வழியாக குளத்தூர்நாயக்கர் பட்டியில் நடைபெறும் வடமாடு நிகழ்ச்சியை தொடங்கி வைக்க வருகை தந்தார்.
அப்போது கந்தர்வக்கோட்டை பேருந்து நிலையத்தில் பேருந்துக்கு காத்திருந்த மாணவிகள் மற்றும் மாண வர்கள் அமைச்சர் ரகுபதியின் வாகனத்தை நிறுத்தி தங்களின் கோரிக்கையை நேரடியாக கூறினர்.
உடனடியாக அமைச்சர் ரகுபதி மாவட்ட போக்குவரத்து அலுவலரைதொலை பேசியில் தொடர்புகொண்டு காலை மற்றும் மாலை நேரங்களில் மாணவ, மாணவிகளின் நலன் கருதி பேருந்தை இயக்க உடனடியாக உத்தர விட்டார்.
அமைச்சரின் உத்தரவின் பேரில் இன்று முதல் காலை 7:30 மற்றும் மாலை 3.30 மணி அளவில் கந்தர்வகோட்டையில் இருந்து தஞ்சாவூருக்கு கூடுதல் நகரப் பேருந்துகள் இயக்கப் படும் என்று நிலைய அதிகாரி கூறினார்.
இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் அமைச்சர் ரகுபதிக்கு நன்றி கூறினர்.