உள்ளூர் செய்திகள்
திருப்பூர் மாவட்டத்தில் 6 நகராட்சி - 15 பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு நாளை தேர்தல்
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 440 கவுன்சிலர்களும் நேற்று பதவியேற்று கொண்டனர்.
திருப்பூர்:
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 440 கவுன்சிலர்களில் 20 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் 420 கவுன்சிலர்கள் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதையடுத்து புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 440 கவுன்சிலர்களும் நேற்று பதவியேற்று கொண்டனர்.
திருப்பூர் மாநகராட்சியில் 60 கவுன்சிலர்கள் பதவியேற்றனர். திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை, தாராபுரம், காங்கேயம், வெள்ளகோவில், பல்லடம், திருமுருகன்பூண்டி ஆகிய 6 நகராட்சிகள் உள்ளன. 6 நகராட்சிகளில் பெரும்பாலான வார்டுகளில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.
உடுமலை நகராட்சியில் 33 வார்டுகளின் கவுன்சிலர்கள், தாராபுரத்தில் 30 கவுன்சிலர்கள், காங்கேயம் நகராட்சியில் 18 கவுன்சிலர்கள், வெள்ளகோவில் நகராட்சியில் 21 கவுன்சிலர்கள், பல்லடம் நகராட்சியில் 18 கவுன்சிலர்கள், திருமுருகன் பூண்டி நகராட்சியில் 27 கவுன்சிலர்கள் அந்தந்த நகராட்சி அலுவலகங்களில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பதவியேற்று கொண்டனர்.
மாவட்டத்தில் கணியூர், கொமரலிங்கம், மடத்துக்குளம், சங்கராமநல்லூர், தளி, கன்னிவாடி, மூலனூர், சின்னக்காம்பாளையம், கொளத்துப்பாளையம், மூலனூர், ருத்ராவதி, அவினாசி, குன்னத்தூர், ஊத்துக்குளி, சாமளாபுரம் ஆகிய 15 பேரூராட்சிகள் உள்ளன. இதில் ருத்ராவதி பேரூராட்சியை தவிர மற்ற 14 பேரூராட்சிகளையும் தி.மு.க.கூட்டணி கைப்பற்றியது. இந்த பேரூராட்சிகளில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் பதவியேற்றனர்.
இந்தநிலையில் நாளை திருப்பூர் மாநகராட்சி மேயர், துணை மேயர் மற்றும் மண்டல தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இதேப்போல் நகராட்சிகளில் தலைவர், துணை தலைவர் மற்றும் பேரூராட்சிகளில் தலைவர், துணை தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.