உள்ளூர் செய்திகள்
அதிகாரிகளுடன் தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. பேச்சுவார்த்தை

ஆரல்வாய்மொழியில் இன்று கழிவு நீர் ஓடை அமைக்க சாலையை தோண்ட எதிர்ப்பு : அதிகாரிகளுடன் தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. பேச்சுவார்த்தை

Published On 2022-02-28 14:59 IST   |   Update On 2022-02-28 14:59:00 IST
ஆரல்வாய்மொழியில் இன்று கழிவு நீர் ஓடை அமைக்க சாலையை தோண்ட எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. பேச்சுவார்த்தை நடத்தினார்.
கன்னியாகுமரி:

நாகர்கோவிலில் பல பகுதிகளில் கழிவுநீர் ஓடை அமைக்கும் பணி நடந்து வருகிறது.  இதனால் பல்வேறு இடங்களில் சாலைகளில் பள்ளம் தோண்டப்பட்டு வருகிறது. இன்று காவல்கிணறு முதல் நாகர்கோவில் வரை செல்லும் நான்கு வழி சாலையில் கழிவுநீர் ஓடை அமைக்க சாலையில் பள்ளம் தோண்ட  தொழிலாளிகள் வந்தனர்.

பள்ளம் தோண்ட இருந்த  நான்கு வழி சாலை தேவசகாயம் மவுண்ட் வழியாக செல்கிறது. இந்த வழியாக  தினசரி நூற்றுக்கும் மேற்பட்ட சுற்றுலா வாகனங்கள் சென்று வருகிறது.

இந்த நான்கு வழி சாலை தவிர தேவசகாயம் மவுன்ட் பகுதிக்கு வருவதற்கு வேறு பாதைகள் கிடையாது. இதை தவிர்த்து வேறு வழியாக ஊருக்குள் வருவதற்கு ஒரு கிலோ மீட்டர் சுற்றி வரவேண்டும். 

இந்த நான்கு வழி சாலை பணி நடந்து வந்த போது அந்தப் பகுதி மக்கள் பாலம் அமைத்து தர வேண்டும் என பலமுறை அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.

ஆனால் அதுகுறித்து எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 
இந்நிலையில் இன்று இந்த நான்கு வழி சாலையில் கழிவுநீர் ஓடை அமைக்க சாலையை தோண்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஜே.சி.பி. எந்திரங்களுடன்  வந்தனர். 

ஆனால் சாலை தோண்டும் பணி நடைபெற்றால் தங்களது பகுதிக்கு  போக்குவரத்து பாதிக்கும் என பொதுமக்கள் கூறி வந்தனர். இதையடுத்து குருசடி தேவசகாயம் மவுண்ட் பங்குதந்தை புரூனோ தலைமையில் பங்கு பேரவை துணைத்தலைவர் மிக்கேல், பங்கு பேரவை பொருளாளர் சகாய பென்சிகர் மற்றும் ஊர் பொதுமக்கள் கழிவுநீர் ஓடை அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்ததும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி, இன்ஸ்பெக்டர் முத்துராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 

இதற்கிடையே தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ.வுக்கும் இதுபற்றி தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார். அவர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

மேலும்   போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

Similar News