உள்ளூர் செய்திகள்
போலியோ சொட்டு மருந்து முகாமை அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்த போது எடுத்த படம்

போலியோ சொட்டு மருந்து முகாமை தொடங்கி வைத்த அமைச்சர்

Published On 2022-02-27 14:54 IST   |   Update On 2022-02-27 14:54:00 IST
புதுக்கோட்டையில் போலியோ சொட்டு மருந்து முகாமை அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார்.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை நகராட்சி ராஜகோபாலபுரம் நகராட்சி தொடக்கப்பள்ளியில் அமைச்சர் எஸ்.ரகுபதி இன்று 27-ந்தேதி  5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கினார். 

நிகழ்ச்சிக்கு  மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் அமைச்சர் தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் நிகழ்வினை இன்று காலை தொடங்கி வைத்துள்ளார். 

அதன் தொடர்ச்சியாக தமிழகம் முழுவதும் போலியோ சொட்டுமருந்து வழங்க ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சிறப்பான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  

அதனடிப்படையில் இன்றைய தினம் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் 1,309 மையங்களும், நகரப் பகுதிகளில் 47 மையங்களும் என மொத்தம் 1,356 மையங்களில் 1,67,490 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது. 

இப்பணியை பாதுகாப்புடன் மேற்கொள்வதற்கென பொதுசுகாதாரத்துறை, நகராட்சி, பேரூராட்சி, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம், ஊரக வளர்ச்சித்துறை, வருவாய்த்துறை, 

தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் மகளிர் சுயஉதவிக் குழுக்களைச் சேர்ந்த 5,377 பணியாளர்கள்,  87 வாகனங்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள்  ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.   

மேலும் ஏதேனும் குழந்தைகள் விடுபட்டிருந்தால் கூட நாளையும் நாளை மறுநாள் வீடு வீடாக சென்று விடுபட்ட குழந்தைகளை கண்டறிந்து போலியோ சொட்டுமருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது  என்றார்.

நிகழ்ச்சியில் மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா, புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.வை.முத்துராஜா, பொதுசுகாதாரத் துணை இயக்குநர் அர்ஜுன்குமார், நகராட்சி ஆணையர் நாகராஜன், முதன்மைக் கல்வி அலுவலர் சத்தியமூர்த்தி, முன்னாள் நகர்மன்ற துணைத் தலைவர் நைனாமுகமது மற்றும் அலுவலர்கள் உள்ளனர்.

Similar News