உள்ளூர் செய்திகள்
உயிரிழப்பு

கருக்கலைப்பு செய்த பெண் உயிரிழப்பு: கணவன்-மனைவி உள்பட 3 பேர் மீது வழக்கு பதிவு

Published On 2022-02-24 15:53 IST   |   Update On 2022-02-24 15:53:00 IST
கருக்கலைப்பு செய்த பெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக கணவன்-மனைவி உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்து தேடி வருகின்றனர்.
சங்கராபுரம்:

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே கீழ்பாடி கிராமத்தை சேர்ந்தவர் சின்னதம்பி மனைவி செல்வி(வயது 30). சின்னதம்பி பெங்களூருவில் கூலி வேலை செய்து வருகிறார்.

இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். செல்வி 5 மாத கர்ப்பமாக இருந்தார். சில வாரங்களுக்கு முன் சூளாங்குறிச்சி மணிமுக்தா அணை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குச் சென்று மருத்துவ பரிசோதனை செய்துள்ளார். அதில், கருவில் உள்ள குழந்தை வளர்ச்சி குறைபாட்டுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதனை தொடர்ந்து, கருக்கலைப்பு செய்வதற்காக தியாகதுருகத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அங்கு 8,000 ரூபாய் செலவாகும் எனக் கூறியுள்ளனர்.

இதனையறிந்த, கீழ்பாடியில் மருந்து கடை வைத்துள்ள முத்துக்குமாரி என்பவர் கருக்கலைப்பு செய்வதாகக் கூறி செல்வியை மருந்து கடைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு, முத்துக்குமாரி மற்றும் அருண் மனைவி கவிதா ஆகியோர் செல்விக்கு கருக்கலைப்பு செய்துள்ளனர். இதனால், செல்விக்கு அதிகளவு ரத்தபோக்கு ஏற்பட்டதுடன், சுயநினைவு இழந்தார். உடன், அவரது உறவினர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே செல்வி இறந்தார்.

தகவல் அறிந்த ரிஷிவந்தியம் வட்டார மருத்துவ அலுவலர் பாலாஜி மற்றும் சுகாதாரத்துறையினர் கீழ்பாடி கிராமத்தில் விசாரணை நடத்தினர். இது குறித்த புகாரின் பேரில், மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன், அவரது மனைவி முத்துக்குமாரி, கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே தேவபாண்டலத்தைச் சேர்ந்த அருண், அவரது மனைவி கவிதா ஆகிய 3 பேர் மீதும் ரிஷிவந்தியம் போலீசார் வழக்குப்பதிந்து தேடி வருகின்றனர்.

Similar News