உள்ளூர் செய்திகள்
சென்னை மாநகராட்சியில் மேயர், கவுன்சிலர்கள் அமரும் கூட்டரங்கம்

சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் கவுன்சிலர்கள் பதவி ஏற்க மாமன்ற அரங்கம் புதுப்பிப்பு

Published On 2022-02-22 13:46 IST   |   Update On 2022-02-22 13:46:00 IST
சென்னை மாநகராட்சியின் மேயராக தேர்ந்தெடுக்கப்படுபவர் பதவி ஏற்ற பிறகு 18 பவுன் தங்க சங்கிலி அணிந்து மேயருக்கான பிரத்யேக அங்கியில் கையில் பளபளக்கும் செங்கோலுடன் காட்சி அளிப்பது வழக்கம்.
சென்னை:

சென்னை மாநகராட்சியின் ரிப்பன் மாளிகை இந்தியாவிலேயே மிக பழமையான கட்டிடம் ஆகும்.

334 ஆண்டுகள் பாரம்பரியமிக்க இந்த கட்டிடம் 1688-ம் ஆண்டு செப்டம்பர் 29-ந் தேதி கிழகிந்திய கம்பெனியின் உரிமை சாசனத்தின்படி அந்த காலத்திலேயே ரூ.7.5 லட்சம் செலவு செய்து கட்டப்பட்டது.

சென்னை மாநகராட்சி பரப்பளவு விரிவடைய மாநகராட்சி கட்டிடமும் பழமை மாறாமல் அவ்வப்போது புதுப்பிக்கப்பட்டு வந்துள்ளது.

சென்னை மாநகராட்சிக்கு 2011-ல் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்தது அப்போது தேர்ந்தெடுக்கப்பட்ட மேயர் மற்றும் 200 கவுன்சிலர்களின் பதவிக்காலம் 2016-ம் ஆண்டு முடிவடைந்தது. அதன் பிறகு உள்ளாட்சி தேர்தல் நடக்காததால் மாமன்ற உறுப்பினர்கள் அமரும் கூட்டரங்கம் பூட்டப்பட்டு கிடந்தது.

6 ஆண்டுகளாக தேர்தல் நடைபெறாததால் பயன்பாடு இல்லாமல் தூசி படர்ந்திருந்தது.

தேர்தல் தேதி அறிவிப்பு வெளியான நாளில் இருந்து சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டரங்கம் சீரமைக்கும் பணி வேகமாக நடைபெற்றுவந்தது. சுவர்களுக்கு புது வர்ணம் பூசப்பட்டு மேஜை, நாற்காலிகள் அனைத்துக்கும் பாலீஸ் போடப்பட்டது. இருக்கைகளும் புதுப்பிக்கப்பட்டு உள்ளது.

மாநகராட்சிக்கு தேர்ந்தெடுக்கப்படும் 200 கவுன்சிலர்களும் வருகிற 2-ந் தேதி மாமன்ற அரங்கில் தான் பதவி ஏற்க உள்ளனர்.

அதன் பிறகு மறைமுக தேர்தல் மூலம் மார்ச் 4-ந் தேதி மேயர், துணை மேயரை தேர்ந்தெடுக்க உள்ளனர்.

சென்னை மாநகராட்சியின் மேயராக தேர்ந்தெடுக்கப்படுபவர் பதவி ஏற்ற பிறகு 18 பவுன் தங்க சங்கிலி அணிந்து மேயருக்கான பிரத்யேக அங்கியில் கையில் பளபளக்கும் செங்கோலுடன் காட்சி அளிப்பது வழக்கம்.

ராஜா சர் முத்தையா செட்டியார் மேயராக இருந்தபோது தான் அணிந்திருந்த 18 பவுன் தங்க சங்கிலியை தனக்குப் பிறகு மாநகராட்சியிடமே ஒப்படைத்திருந்தார். அவருக்கு பிறகு வந்த மேயர்களும் அந்த சங்கிலியை அணிவது வழக்கத்தில் உள்ளது.

மாநகராட்சி மன்ற கூட்டத்தின்போது கருப்பு நிற அங்கியும், பொது நிகழ்ச்சிகளின்போது சிவப்பு நிற அங்கியும் மேயர் அணிவது சம்பிரதாயமாக உள்ளது.

தற்போது மாமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளதால் மேயர், துணை மேயராக யார் வருவார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இதையொட்டி மேயர் அமரும் கலைநயமிக்க சிம்மாசனமும் புதுப்பொலிவாக்கப்பட்டுள்ளது. மேயர், துணை மேயர் அறைகளும் புதுப்பிக்கப்பட்டு உள்ளது.

Similar News