உள்ளூர் செய்திகள்
ஆன்லைன் கல்வி

கல்லூரிகளில் ஆன்லைன் பட்டப்படிப்புக்கு பல்கலைக்கழக மானியக் குழு அனுமதி

Published On 2022-02-21 05:21 GMT   |   Update On 2022-02-21 06:47 GMT
நேரடி படிப்புக்கு இணையானது என அறிவித்துள்ள பல்கலைக்கழக மானியக் குழு 900 கல்லூரிகளுக்கு ஆன்லைன் பட்டப்படிப்புக்கு அனுமதி வழங்கியுள்ளது.
சென்னை:

சில பல்கலைக்கழகங்களில் மட்டும் ஆன்லைன் வழி பட்டப்படிப்புகள் நடைமுறையில் இருந்து வருகிறது. இந்த நிலையில் 900 தன்னாட்சி அங்கீகாரம்  பெற்ற கல்லூரிகளில் ஆன்லைன் பட்டப்படிப்புக்கு பல்கலைக்கழக மானியக் குழு அனுமதி அளித்துள்ளது. இதன்மூலம் மாணவர்கள் நேரடியாக கல்லூரிகளுக்கு வராமல் ஆன்லைன் மூலம் பட்டப்படிப்பை முடிக்க முடியும்.

இதன்மூலம் அதிகமான மாணவர்கள் ஆன்லைன் மூலம் பட்டப்படிப்பை பெற முடியும் என பல்கலைக்கழக மானியக் குழு தெரிவித்துள்ளது. மேலும், நேரடியாக கல்லூரி சென்று பட்டப்படிப்பு முடிக்கும் மாணவருக்கு சமமாக ஆன்லைன் வழியில் பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களும் கருதப்படுவார்கள்.



புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் 2035-ம் ஆண்டிற்குள் நாடு முழுவதும் உயர்க்கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையை 50 சதவீதமாக உயர்த்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த புதிய நடைமுறை நாடுமுழுவதும் அமல்படுத்தப்பட உள்ளது. அந்தவகையில் ஆன்லைன் வழி இளங்கலை படிப்புகளில் சேருவதற்கு பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சியும் முதுகலை படிப்புகளில் சேர இளங்கலை படிப்புகளில் தேர்ச்சியும் பெற்றிருத்தல் அவசியம் ஆகும்.

ஆன்லைன் வழி பட்டப்படிப்புகளை துவங்குவதற்கு பல்கலைக்கழக மானியக்குழுவின் முன் அனுமதியை பெற அவசியம் இல்லை என்றும் யுஜிசி தெரிவித்துள்ளது. எனினும் ஆன்லைன் பட்டப்படிப்புகளை வழங்கும் கல்லூரிகள் NAAC எனப்படும் தர மதிப்பீட்டில் 3.26 மதிப்பெண்களை பெற்றிருக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் கல்லூரிகள் சேர்வதற்கான குறிப்பிட்ட மதிப்பெண்ணை பெற்றிருக்க வேண்டும். மத்திய தேர்தல் முகமை மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் தேர்வுகள் நடத்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News