உள்ளூர் செய்திகள்
போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் நீதி மய்யத்தினர்.

வாக்கு எண்ணிக்கையை நிறுத்தி வைக்ககோரி கமல் கட்சியினர் போராட்டம்

Published On 2022-02-20 07:57 GMT   |   Update On 2022-02-20 07:57 GMT
தமிழக தேர்தல் ஆணையத்தின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் நீதி மய்ய கட்சியினருக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
சென்னை:

சென்னை கோயம்பேட்டில் உள்ள தமிழக தேர்தல் ஆணையத்தின் முன்பு இன்று மக்கள் நீதி மய்யம் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கண்களில் கருப்பு துணிகளை கட்டிக்கொண்டு மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர்கள் சுமார் 50 ஆண்களும், பெண்களும் திரண்டு வந்தனர்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.வினர் அத்துமீறலில் ஈடுபட்டதை தேர்தல் ஆணையம் கண்டு கொள்ளவில்லை. கள்ள ஓட்டு போட்டதையும் தடுக்கவில்லை என்று குற்றம் சாட்டினார்கள்.

எனவே தமிழகம் முழுவதும் நாளை மறுநாள் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருக்கும் வாக்கு எண்ணிக்கையை நிறுத்தி வைக்க வேண்டும். மறுதேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று கோ‌ஷம் எழுப்பினார்கள்.

இதுபற்றி தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுக்கப்போவதாக கூறினார்கள். ஆனால் போலீசார் அலுவலக வளாகத்துக்குள் அனுமதிக்கவில்லை. அதை மீறி கேட்டை தள்ளிக்கொண்டு சிலர் உள்ளே நுழைந்தனர்.

இதனால் போலீசாருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. போலீசார் அவர்களை வெளியேற்றிவிட்டு கேட்டை இழுத்து மூடினார்கள். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News