உள்ளூர் செய்திகள்
ஷேர் ஆட்டோ கவிழ்ந்து கிடக்கும் காட்சி.

கன்னியக்கோவிலில் ஷேர் ஆட்டோ மீது அரசு பஸ் மோதல்- கர்ப்பிணி உள்பட 15 பேர் படுகாயம்

Published On 2022-02-17 07:54 GMT   |   Update On 2022-02-17 07:54 GMT
கடலூர் பகுதியிலிருந்து தினமும் நூற்றுக்கணக்கான பேர் மருத்துவம், வேலை மற்றும் கல்விக்காக கிருமாம்பாக்கம் பகுதியை நோக்கி வருகின்றனர். இவர்கள் பெரும்பாலும் ஷேர் ஆட்டோ, ஆட்டோவைத் தான் பயன்படுத்துகின்றனர்.
பாகூர்:

கடலூரில் இருந்து ரெட்டிச்சாவடிக்கும், கிருமாம்பாக்கத்திற்கும் அனுமதி இல்லாத ஏராளமான ஆட்டோ, ஷேர் ஆட்டோக்கள் இயங்கிவருகிறது.

இன்று காலை சுமார் 10 மணியளவில் கடலூரில் இருந்து ஷேர் ஆட்டோ ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு ரெட்டிச்சாவடி நோக்கி சென்று கொண்டிருந்தது. கன்னியக்கோவில் தனியார் பெட்ரோல் பங்க் எதிரில் வந்த போது பின்புறமாக வந்த தமிழக அரசு பேருந்து ஷேர் ஆட்டோவை உரசியதாக கூறப்படுகிறது.

இதனால் ஷேர் ஆட்டோ தலைக்குப்புற கவிழ்ந்து சாலை ஓரத்தில் விழுந்தது. ஆட்டோவில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் சாலையில் விழுந்து கிடந்தனர். இந்த விபத்தில் 8 மாத கர்ப்பிணி, குழந்தை உட்பட 15 பேர் காயமடைந்தனர். அங்கிருந்தவர்கள் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு கிருமாம்பாக்கம் அருகே உள்ள மகாத்மா காந்தி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் நிர்மல் குமார் தலைமையில் பேரிடர் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்தனர்.

தகவலறிந்த கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கீர்த்திவர்மன், சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர், உதவி சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் மற்றும் போலீசார் விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.

கடலூர் பகுதியிலிருந்து தினமும் நூற்றுக்கணக்கான பேர் மருத்துவம், வேலை மற்றும் கல்விக்காக கிருமாம்பாக்கம் பகுதியை நோக்கி வருகின்றனர். இவர்கள் பெரும்பாலும் ஷேர் ஆட்டோ, ஆட்டோவைத் தான் பயன்படுத்துகின்றனர்.

இந்த ஷேர் ஆட்டோக்கள் பெரும்பாலும் உறுதி தன்மையற்று பாதுகாப்பில்லாமல் இருப்பதாக பயணிகள் கூறுகின்றனர்.

இன்று நடந்த விபத்தில் ஷேர் ஆட்டோவில் அச்சு முறிந்து அப்பளம் போல் நொறுங்கி காணப்பட்டது.பொதுமக்களின் உயிருக்கு பாதுகாப்பு அளிக்கும் பொருட்டு இது போன்ற வாகனங்களை கண்காணிக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
Tags:    

Similar News