உள்ளூர் செய்திகள்
சாலை மறியலில் ஈடுபட்ட பள்ளி மாணவ மாணவிகளிடம் வசந்தம் கார்த்திகேயன் எம்எல்ஏ பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

கள்ளக்குறிச்சி அருகே அரசு பள்ளி மாணவ- மாணவிகள் சாலை மறியல்

Published On 2022-02-16 15:49 IST   |   Update On 2022-02-16 15:49:00 IST
கள்ளக்குறிச்சி அருகே பள்ளி மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி அருகே பொரசக்குறிச்சி மற்றும் கனங்கூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவ -மாணவிகள் சுமார் 100 க்கும் மேற்பட்டோர் விருகாவூர் மற்றும் நாகலூர் ஆகிய அரசு மேல்நிலைப் பள்ளிகளில் படித்து வருகின்றனர்.

இந்த பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் தினமும் பொரசக்குறிச்சி பஸ் நிலையத்தில இருந்து அரசு பஸ்சில் ஏறி பள்ளிகளுக்குச் செல்வது வழக்கம்.

நேற்று அவ்வாறு அடரி கிராமத்திலிருந்து கள்ளக்குறிச்சி நோக்கி சென்ற அரசு பஸ்சில் ஏறிச் சென்றனர். ஆனால் பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்ததால் பஸ்சின் படிக்கட்டில் ஒரு சில மாணவர்கள் தொங்கி சென்றனர். இதனால் டிரைவர் மற்றும் கண்டக்டர் படியில் தொங்கியபடி வந்த சுமார் 10 மாணவர்களை பாதி வழியில் கீழே இறக்கி விட்டு பள்ளிக்கு நடந்து வாருங்கள் என கூறினர்.

ஆத்திரமடைந்த 50- க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் இன்று பொரசக்குறிச்சி பஸ் நிறுத்தத்தில் அந்த வழியாக வந்த அதே அரசு பஸ்சை நிறுத்தி கூடுதல் அரசு பஸ் இயக்க வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த வரஞ்சரம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பிரபாகரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். அப்போது தனது சொந்த ஊரான சாத்தனூர் கிராமத்தில் இருந்து கள்ளக்குறிச்சி நோக்கி காரில் வந்த ரிஷிவந்தியம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன் மாணவ மாணவிகளிடம் சாலை மறியல் குறித்து கேட்டறிந்தார்.

தொடர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். இதனையடுத்து மாணவர்களிடம் ஒரு சில நாட்களில் பள்ளி மாணவ, மாணவிகள் பள்ளிக்கு செல்ல ஏற்றவாறு கூடுதலாக அரசு பேருந்து இயக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதனை ஏற்று மாணவ, மாணவிகள் அதே அரசு பஸ்சில் ஏறி பள்ளிக்குச் சென்றனர். இதனால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பள்ளி மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Similar News