உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்.

பூட்டிய வீட்டின் கதவை உடைத்து நகை திருட்டு

Published On 2022-02-16 07:49 GMT   |   Update On 2022-02-16 07:49 GMT
திருவையாறு அருகே பூட்டிய வீட்டின் கதவை உடைத்து மர்ம நபர்கள் நகையை திருடிச் சென்றுள்ளனர்.
திருவையாறு:

திருவையாறு அருகே செம்மங்குடி கிராமத்தில் தெற்குத் தெருவில் வசிப்பவர் அனிதா (வயது 21). இவரது கணவர் அசோக்குமார் வெளிநாட்டில் வேலைபார்த்து வருகிறார். கடந்த 10 ம் தேதி அனிதா வீட்டை பூட்டிவிட்டு மாமனார், மாமியார் மற்றும் தனது குழந்தைகளுடன் கபிஸ்தலத்தில் உள்ள தனது உறவினர் வீட்டு கிரகப் பிரவேசத்திற்கு சென்றுவிட்டு திரும்பி வந்த போது, வீட்டின் நிலைக்கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததைப் பார்த்து அதிர்ந்தார்.

உள்ளே சென்று பார்த்த போது பீரோவிலிருந்த 10 பவுன் தங்க நகை மற்றும் வெள்ளி கொலுசுகள் திருட்டுப் போயிருந்தது தெரியவந்தது. இது குறித்த திருவையாறு போலீஸ் நிலையத்தில் அனிதா கொடுத்த புகாரின்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜ்மோகன், சப்&இன்ஸ்பெக்டர்கள் ரேணுகா, செந்தில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டார்கள். 

மேலும் தஞ்சையிலிருந்து வரவழைக்கப்பட்ட மோப்ப நாய் வீட்டைச் சுற்றி வந்து படுத்துக் கொண்டது. கைரேகை நிபுணர்கள் வந்து கைரேகை பதிவுகளை எடுத்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து திருவையாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News