உள்ளூர் செய்திகள்
ஹாட் பாக்ஸ்கள்

கோவையில் வாக்காளர்களுக்கு வினியோகிக்க கொண்டு சென்ற ஹாட் பாக்ஸ்கள் பறிமுதல்

Published On 2022-02-15 16:00 IST   |   Update On 2022-02-15 16:00:00 IST
தமிழகம் முழுவதும் வருகிற 19-ந் தேதி நகர்ப்பு உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.
கோவை:

தமிழகம் முழுவதும் வருகிற 19-ந் தேதி நகர்ப்பு உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து கோவையில் வேட்பாளர்கள்  விறுவிறுப்பாக வாக்கு சேகரித்து வருகின்றனர். 
 
நேற்று முன்தினம் இரவு குனியமுத்தூர் பகுதியில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக கொண்டு சென்ற ஹாட்பாக்ஸ்களை அரசியல் கட்சியினர் சுற்றி வளைத்து பிடித்தனர்.இந்த நிலையில் இன்று காலை கோவை செல்வபுரம் அடுத்த  தெலுங்குபாளையம் மாநகராட்சி  71&வது வார்டு பகுதியில் ஒரு சிலர் வாகனங்களில் ஹாட் பாக்ஸில் வைத்து கொண்டு வீடு வீடாக வழங்குவதாக அ.தி.மு.க வேட்பாளருக்கு தகவல் கிடைத்தது. 
 
உடனே அவர் அ.தி.மு.க.வினருடன் சம்பவ இடத்திற்கு சென்றார். அவர்களிடம் எதற்காக ஹாட் பாக்ஸ்கள்  கொடுக்கிறீர்கள் என்று கேட்டார்.  அவர்கள் சரியாக பதில் அளிக்காமல் இருந்ததாக தெரிகிறது. உடனே அ.தி.மு.க வேட்பாளர் இதுகுறித்து தேர்தல் பறக்கும் படைக்கு அதிகாரிகளுக்கு  தகவல் தெரிவித்தார். பறக்கும் படை அதிகாரிகள் சம்பவயிடத்துக்கு வந்தனர்.பின்னர் அவர்கள் அங்கிருந்த  ஹாட் பாக்சுகளை பறிமுதல் செய்தனர். 
 
கட்சியினரிடம் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். ஆனால் கட்சியினர் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி  பறக்கும் படை அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என கட்சியினர் தெரிவித்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.இதையடுத்து அதிகாரிகள் ஹாட் பாக்ஸ் கைப்பற்றி தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News