உள்ளூர் செய்திகள்
ஆற்காட்டில் பஸ் மீது கார் மோதி வாலிபர் பலி
ஆற்காடு அருகே பஸ் மீது கார் மோதி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
ஆற்காடு:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி ஸ்டேட் பேங்க் தெருவை சேர்ந்தவர் தனகோட்டி. இவரது மகன் பாபு (வயது 22). இவர் நேற்று இரவு ஆரணியில் இருந்து காஞ்சிபுரத்துக்கு காரில் புறப்பட்டார்.
நள்ளிரவு 12 மணி அளவில் ஆற்காடு அடுத்த கன்னிகாபுரம் சாலையில் கார் சென்று கொண்டிருந்தது.அப்போது எதிரே வந்த தனியார் கம்பெனி பஸ்சும் காரும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேராக மோதிக்கொண்டன.
விபத்தில் காரின் முன்பகுதி நொறுங்கியது.காரின் ஈடுபாடுகளில் சிக்கி பாபு படுகாயம் அடைந்தார். அருகில் இருந்தவர்கள் இடிபாடுகளிலிருந்து பாபுவை மீட்க போராடினர்.ஆனால் பாபுவை அவர்களால் மீட்கமுடியவில்லை.
இதுகுறித்து ஆற்காடு தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இடிபாடுகளில் சிக்கிய பாபுவை மீட்டு பரிசோதனை செய்தனர். பாபு இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தது தெரியவந்தது.
இதையடுத்து பாபு பிணத்தை மீட்டு போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஆற்காடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.