உள்ளூர் செய்திகள்
திருவண்ணாமலையில் மண்பாண்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
திருவண்ணாமலை அருகே மணல் எடுப்பதை தடுப்பதாக புகார் தெரிவித்து மண்பாண்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை:
மண்பாண்ட தொழிலாளர்கள் ஆண்டுக்கு 800 மாட்டுவண்டி அளவுக்கு மண் எடுக்க, அரசு உத்தரவு இருந்தும், வருவாய் துறையும், காவல் துறையும் மண் எடுக்க செல்லும் மண்பாண்ட தொழிலாளர்கள் மீது, வழக்குப் போடுவது, சிறையில் அடைப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றன.
இதனால் மண்பாண்டம், நாட்டு செங்கல், நாட்டு ஓடு ஆகிய தொழில் செய்யாமல் வாழ்வாதாரத்தை இழந்து வேலை வாய்ப்பின்றி மண்பாண்ட தொழிலாளர்கள் தவித்து வருவதாக கூறப்படுகிறது.
எனவே மண்பாண்ட தொழிலாளர்கள் தொடர்ந்து வேலை செய்யும் வகையில், தடையின்றி மண் எடுக்க அனுமதி அளிக்க வேண்டும் என வலியுறுத்தி திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சி.ஐ.டி.யு. சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, ஒருங்கிணைப்பாளர் கே.கே. வெங்கடேசன் தலைமை தாங்கினார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் எம்.சிவக்குமார், சி.ஐ.டி.யு.மாவட்ட துணைத்தலைவர் எம். வீரபத்திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ப.செல்வன், எஸ். ராமதாஸ் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.