உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்.

உடுமலை அரசு மருத்துவமனையில் ரூ.9 கோடி மதிப்பில் அவசர சிகிச்சை கட்டிடம்- விரைவில் பணிகள் தொடக்கம்

Published On 2022-02-15 06:03 GMT   |   Update On 2022-02-15 06:03 GMT
தற்போதுள்ள பழைய கட்டிடத்தில் அவசர சிகிச்சை மையம் மற்றும் டயாலிசிஸ் பிரிவு செயல்படுகிறது.
உடுமலை:

உடுமலை அரசு மருத்துவமனைக்கு 20 கி.மீ., சுற்றுப்பகுதி கிராமங்களில் இருந்து தினமும் 700-க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் பல்வேறு சிகிச்சைகளுக்காக வந்து செல்கின்றனர். இங்கு உள்நோயாளியாக தங்கி  சிகிச்சை பெறும் வசதியும் உள்ளது. 

இதற்காக, ‘டயாலிசிஸ்’ சிகிச்சை, ஸ்கேன், எக்ஸ்ரே மற்றும் ரத்தப் பரிசோதனைக்கான ஆய்வகம் போன்ற வசதிகளும் உள்ளன. 

இருப்பினும் விபத்து சிகிச்சை பிரிவு இல்லாததால் சாலை மற்றும் பிற விபத்துகளில் படுகாயமடைபவர்களுக்கு முதலுதவி அளித்து மேல் சிகிச்சைக்காக கோவைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

அப்போது உயிரிழக்கும் சம்பவம் ஏற்படுகிறது. எனவே மருத்துவமனையில்  அவசர சிகிச்சை மையம் துவங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. 

இதற்காக ரூ. 9 கோடி செலவில், விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு கட்டும் பணி தொடங்கப்படவுள்ளது. அதேநேரம் மருத்துவமனை வளாகத்தில் போதிய இடவசதி இல்லாததால் அங்குள்ள பழைய கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்தி  புதிய கட்டுமானம் தொடங்கப்பட உள்ளது. 

இதுகுறித்து மருத்துவ பணிகள் துறையினர் கூறியதாவது:-

தற்போதுள்ள பழைய கட்டிடத்தில் அவசர சிகிச்சை மையம் மற்றும் டயாலிசிஸ் பிரிவு செயல்படுகிறது. இப்பிரிவுகள் புதிய கட்டிடத்திற்கு மாற்றம் செய்யப்படும். 

பின்னர் இடிப்புப்பணி மேற்கொள்ளப்படும். விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு பயன்பாட்டிற்கு வந்தால் விபத்தில் காயமடைபவர்களுக்கு இங்கேயே சிகிச்சை அளிக்கப்படும். 

குறிப்பிட்ட எண்ணிக்கையில் படுக்கை வசதி, ஆப்பரேஷன் தியேட்டர், எக்ஸ்-ரே போன்ற வசதிகள் ஏற்படுத்தப்படும். வீண் அலைச்சலும், தாமதத்தால் ஏற்படும் உயிரிழப்பும் தவிர்க்கப்படும். 

இவ்வாறு அவர்கள் கூறினர்.
Tags:    

Similar News