உள்ளூர் செய்திகள்
கீழையூரில் அனைவருக்கும் நகை கடன் தள்ளுபடி செய்யக்கோரி விவசாயிகள் ஆர்பாட்டம்
தரங்கம்பாடி:
செம்பனார்கோயில் ஒன்றியம் கீழையூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் 405 விவசாயிகள் நகைக் கடன் பெற்றுள்ளனர்.
இதில் 10 விவசாயிகளுக்கு மட்டும் நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள கீழையூர் நடுக்கரை, கிடாரங்கொண்டான் ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த நகைக்கடன் பெற்ற 395 விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பு வெளியாகாததோடு, நகை கடன் தள்ளுபடி செய்த நபர்களின் பட்டியல் வெளியிடப்படவில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த விவசாயிகள் வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவர் கபாடி.பாண்டியன் தலைமையில் கீழையூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் விவசாய நகைக்கடன் அனைவருக்கும் தள்ளுபடி செய்ய வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
இதில் திருவாளசுந்தரி, பிரேம்குமார், நித்தியபாரத், சியாமளா ஸ்ரீதர், மேகநாதன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.