உள்ளூர் செய்திகள்
கள்ளக்குறிச்சி அருகே தச்சூரில் வாக்கு எண்ணும் மையத்தில் தடுப்புகள் அமைக்கும் பணி தீவிரம்
தச்சூரில் உள்ள பாரதி கலை அறிவியல் கல்லூரியில் கள்ளகுறிச்சி நகராட்சி மற்றும் சங்கராபுரம் பேரூராட்சி ஆகிய பகுதிகளுக்கு வாக்கு எண்ணிக்கை மையம் அமைக்கப்பட்டுள்ளது.
கண்டாச்சிமங்கலம்:
தமிழகம் முழுவதும் வருகின்ற 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. அதன்படி திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் தீவிரமாக வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தச்சூரில் உள்ள பாரதி கலை அறிவியல் கல்லூரியில் கள்ளகுறிச்சி நகராட்சி மற்றும் சங்கராபுரம் பேரூராட்சி ஆகிய பகுதிகளுக்கு வாக்கு எண்ணிக்கை மையம் அமைக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி நகராட்சியில் உள்ள 21 வார்டுகளில் 89 பேர் போட்டியிடுகின்றனர். இங்கு 46 வாக்குச்சாவடி மையங்களில் 46 ஆயிரத்து 714 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.
இதேபோல் சங்கராபுரம் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இதில் 4 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ள 11 வார்டுகளுக்கு 43 பேர் போட்டியிடுகின்றனர். 11 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் வருகின்ற 19 ந்தேதி வாக்கு பதிவு நிறைவடைந்ததும் மின்னணு வாக்கு பதிவு எந்திரங்கள் கள்ளக்குறிச்சி அருகே தச்சூர் கிராமத்தில் உள்ள பாரதி கலை அறிவியல் கல்லூரிக்கு கொண்டுசெல்லப்பட்டு ஸ்ட்ராங் ரூமில் வைத்து பூட்டி சீல் வைத்து பாதுகாப்பாக வைக்கப்படுகின்றன. இதைத்தொடர்ந்து 22 ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இதில் கல்லூரி வளாகத்தில் கீழ்தளத்தில் கள்ளக்குறிச்சி நகராட்சி வாக்கு எண்ணிக்கை மையமும், மேல்தளத்தில் சங்கராபுரம் பேரூராட்சி வாக்கு எண்ணிக்கை மையமும் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு வாக்கு எண்ணிக்கை அறை, ஸ்டிராங் ரூம், வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் வந்து செல்வதற்கான வழித்தடம் ஆகியவற்றுக்கான தடுப்புகள் அமைக்கும் பணி மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துதல் உள்ளிட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.