உள்ளூர் செய்திகள்
வேட்பாளர்களை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி நாளை திருச்சியில் பிரசாரம்
அ.தி.மு.க. மற்றும் த.மா.கா. வேட்பாளர்களை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி நாளை திருச்சியில் பிரசாரம் செய்ய உள்ளார்.
திருச்சி:
தமிழக நகர்ப்புற உள் ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் வருகிற 19&ந்தேதி ஒரே கட்டமாக நடக்கிறது. இதற்கான தேர்தல் பிரசாரம் முடிய இன்னும் 4 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் தலைவர்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிச்சாமி தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப் பயணம் செய்து பிரசாரம் செய்து வருகிறார்.
இந்த நிலையில் அவர் திருச்சிக்கு நாளை (செவ் வாய்க்கிழமை) வருகை தருகிறார். திருச்சி சுப்பிரமணியபுரம் ஜமால் முகமது கல்லூரி அருகில் அமைந்துள்ள வி.எஸ்.முகமது இப்ராஹீம் மஹாலில் நாளை மதியம் 1 மணி அளவில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. மற்றும் த.மா.கா. வேட்பாளர்களை ஆதரித்து எடப்பாடி கே. பழனிச்சாமி பிரசாரம் செய்கிறார்.
முன்னதாக தஞ்சாவூரில் மதியம் பிரசாரத்தை முடித்துக்கொண்டு திருச்சி வருகை தரும் எடப்பாடி பழனிச்சாமிக்கு காட்டூரில் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர்கள் வெல்லமண்டி என். நடராஜன், ப.குமார், மு. பரஞ்ஜோதி ஆகியோர் தலைமையில் அ.தி.மு.க.வினர் வரவேற்பு அளிக்கிறார்கள்.
அதன்பின்னர் நேராக வி.எஸ். மஹாலுக்கு வருகை தருகிறார். பின்னர் ஒரு மணிநேரத்தில் பிரசாரத்தை முடித்து கொண்டு சேலம் புறப்பட்டு செல்கிறார். எடப்பாடி பழனிச்சாமி வருகையையடுத்து பிரசாரத்துக்கான ஏற்பாடுகளை அக்கட்சியினர் செய்து வருகின்றனர்.