உள்ளூர் செய்திகள்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

மதுரை மாவட்டத்தில் மு.க.ஸ்டாலின் இன்று பிரசாரம்

Published On 2022-02-14 09:19 GMT   |   Update On 2022-02-14 09:19 GMT
மதுரை மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி வார்டுகளில் போட்டியிடும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை காணொலி மூலம் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.
மதுரை:

தமிழகத்தில் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெறுகிறது. கட்சி தலைவர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் ஒவ்வொரு மாவட்டத்திலும் மதசார்பற்ற கூட்டணி சார்பில் போட்டியிடும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து சென்னையில் இருந்தபடியே காணொலி காட்சி மூலம் பிரசாரம் செய்து வருகிறார்.

மு.க.ஸ்டாலின் பிரசாரத்தை மக்கள் பார்க்கும் வகையில் அந்தந்த மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் எல்.இ.டி. திரையில் ஒளிபரப்பப்படுகிறது. ஒவ்வொரு இடங்களிலும் 1000 பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் தி.மு.க.வினர் ஏற்பாடுகளை செய்து இருக்கின்றனர்.

கோவை, சேலம், கடலூர், தூத்துக்குடி, ஈரோடு, கன்னியாகுமரி, திருப்பூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் காணொலி காட்சி மூலம் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்தார்.

இந்நிலையில் மதுரை மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி வார்டுகளில் போட்டியிடும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை 5 மணிக்கு காணொலி மூலம் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.

மதுரை மாநகராட்சி பகுதியில் மொத்தம் 64 இடங்களிலும், நகராட்சி பகுதிகளில் திருமங்கலத்தில் 3 இடம், உசிலம்பட்டியில் 3 இடம், மேலூரில் 13 இடம் என நகராட்சி பகுதிகளில் மொத்தம் 19 இடங்களில் மு.க.ஸ்டாலினின் பிரசாரம் எல்.இ.டி. திரையில் ஒளிபரப்பப்படுகிறது.

அதேபோல் பேரூராட்சி பகுதியில் ஏ.வெள்ளாலப்பட்டியில் 5 இடம், சோழவந்தானில் 9 இடம், வாடிப்பட்டியில் 9 இடம், அலங்காநல்லூரில் 6 இடம், பாலமேட்டில் 2 இடம், டி.கல்லுப்பட்டி, பேரையூர், எழுமலை ஆகிய பேரூராட்சிகளில் ஒரு இடம் என 9 பேரூராட்சிகளில் மொத்தம் 34 இடங்களில் மு.க.ஸ்டாலினின் பிரசாரம் எல்.இ.டி. திரையில் ஒளிபரப்பப்படுகிறது.

மாவட்டம் முழுவதும் மொத்தம் 117 இடங்களில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் பிரசாரம் செய்து தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார். மேற்கண்ட 117 இடங்களிலும் எல்.இ.டி. திரையில் மு.க.ஸ்டாலின் பிரசாரத்தை ஒளிபரப்புவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மதுரை மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் தெரிவித்தனர்.

ஆனையூர் பகுதியில் தமிழ்நகர், கோசாகுளம், மகாத்மா காந்தி நகர், எஸ்.ஆலங்குளம், கூடல் புதூர் ஆகிய 5 இடங்களிலும், திருப்பாலை பகுதியில் நாராயணபுரம், கிருஷ்ணா நகர், திருப்பாலை, ஆத்தி குளம் ஆகிய 4 இடங்களிலும், கண்ணனேந்தல் பகுதியில் அய்யர்பங்களா, அம்பலகாரன்பட்டி, பரசு ராமன்பட்டி ஆகிய 3 இடங்களிலும், வண்டியூர் பகுதியில் சவுராஷ்டிராபுரம் மற்றும் வண்டியூர் ஆகிய இடங்களில் உள்ள தேர்தல் பணிமனை ஆகிய இடங்களில் மு.க.ஸ்டாலினின் காணொலி பிரசாரம் ஒளிபரப்பப்படுகிறது.

ஏ.வெள்ளாலப்பட்டி பேரூராட்சியில் செட்டியார் பட்டி மந்தை திடல், மாரியம்மன் கோவில் தெரு, கல்லுமந்தை திடல், வளையர் தெரு மந்தை உள்ளிட்ட 5 இடங்களிலும், சோழவந்தான் பேரூராட்சியில் 9 இடங்களிலும், வாடிப்பட்டி பேரூராட்சியில் 9 இடங்களிலும், அலங்காநல்லூர் பேரூராட்சியில் 5 இடங்களிலும், பாலமேடு பேரூராட்சியில் 2 இடங்களிலும் மு.க.ஸ்டாலின் பிரசாரம் ஒளிபரப்பப்படுகிறது

மேலூர் நகராட்சி பகுதியில் பழைய சுக்காம்பட்டி, சந்தைபேட்டை, சொக்கம்பட்டி, கோமதியாபுரம், சிவகங்கை ரோடு, மலம்பட்டி, மில்கேட், கம்பர் தெரு, காந்திஜி பூங்கா தெரு, திருச்சி மெயின் ரோடு, அழகர்கோவில் ரோடு, முகமதியாபுரம், கருத்தபுளியம்பட்டி ஆகிய 13 இடங்களில் மு.க.ஸ்டாலின் பிரசாரம் ஒளிபரப்பப்படுகிறது.

மதுரை மாநகராட்சி பகுதியில் ஜீவாநகர் கிழக்கு பகுதியில் 4 இடங்களிலும், ஜீவாநகர் மேற்கு பகுதியில் 5 இடங்களிலும், எல்லீஸ் நகர் பகுதியில் 6 இடங்களிலும், சிம்மக்கல் பகுதியில் 5 இடங்களிலும், பழங்காநத்தம் வடக்கு பகுதியில் 5 இடங்களிலும், பழங்காநத்தம் தெற்கு பகுதியில் 6 இடங்களிலும், ஆரப்பாளையம் பகுதியில் 5 இடங்களிலும் பிரசாரம் ஒளிபரப்பபடுகிறது.
Tags:    

Similar News