உள்ளூர் செய்திகள்
மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் வாலிபர் பலி
கிருமாம்பாக்கத்தில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் வாலிபர் பலியானர்.
புதுச்சேரி:
புதுவை அரியாங்குப்பம் சோலை கவுண்டர் வீதியை சேர்ந்தவர் அய்யப்பன். இவரது மகன் சூர்யா (வயது 18). இவர் புதுவையில் உள்ள தனியார் கார் ஒர்க்ஷாப்பில் வேலை செய்து வந்தார்.
இந்நிலையில், இவர் தனது நண்பர்கள் அதே பகுதியை சேர்ந்த பிரபு மகன் புஷ்பராஜ் (20), முருகன் மகனான தனியார் கல்லூரியில் படிக்கும் சிவக்குமார் (18) ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் கடலூரை நோக்கி சென்று கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை சூர்யா ஓட்டிச் சென்றார்.
கிருமாம்பாக்கம் தனியார் என்ஜினீயரிங் கல்லூரி அருகே சென்ற போது, எதிரே வந்த அடையாளம் தெரியாத கார் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் 3 பேரும் சாலையில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.
உடனடியாக அருகிருந்த வர்கள் அவர்களை மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு, பரிசோதித்த டாக்டர்கள் சூர்யா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
தொடர்ந்து சிவக் குமாருக்கும், புஷ்பராஜிக்கும் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் புஷ்பராஜ் ஆபத்தான நிலையில் உள்ளார்.
இதுகுறித்து சூர்யாவின் உறவினர் வேல்முருகன் அளித்த புகாரின் பேரில் கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கீர்த்திவர்மன், உதவி சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.