உள்ளூர் செய்திகள்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம்

திமுக வெற்றி பெற்று விடும் என அஞ்சி, அதிமுக ஆட்சி உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் வைத்திருந்தது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

Published On 2022-02-14 00:24 IST   |   Update On 2022-02-14 03:42:00 IST
அதிமுகவுக்கு அளிக்கும் வாக்கு என்பது ஊழலுக்கு அளிக்கும் வாக்கு என்பதை தமிழ்நாட்டு மக்கள் தெளிவாக உணர்ந்துள்ளதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல்:

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திண்டுக்கல் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் காணொலி வழியாக  பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: 

கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில், நம்முடைய மாநிலம் என்ன நிலைமைக்கு தள்ளப்பட்டது என்று தமிழ்நாட்டு மக்கள் எல்லாருக்குமே தெரியும். நான் சொல்லித்தான் உங்களுக்குத் தெரிய வேண்டும் என்ற அவசியமில்லை. உள்ளாட்சித் தேர்தலையே நடத்த மனமில்லாமல் நாட்களைக் கடத்திக்கொண்டு போன ஆட்சிதான் அதிமுக ஆட்சி. உள்ளாட்சித் தேர்தல் நடத்தினால் திமுகவினர் வெற்றி பெற்றிடுவார்கள். அவ்வாறு வெற்றி பெற்று வந்தால், அதிமுகவினருடைய ஊழல்களை ஆதாரங்களோடு அம்பலப்படுத்துவார்கள் என்று, அஞ்சி நடுங்கி, உள்ளாட்சித் தேர்தலையே நடத்தாமல் வைத்திருந்த ஆட்சிதான் அதிமுக ஆட்சி.

அன்றைக்கு உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த வேலுமணி. அவரைப் பற்றி எல்லாருக்கும் நன்றாகத் தெரியும். சுண்ணாம்பு பவுடர் வாங்குவதில் இருந்து, பினாயில் வாங்குவது வரைக்கும் ஊழல் செய்த, கறை படிந்த கைகளுக்குச் சொந்தக்காரர். உள்ளாட்சி அமைப்புகளில் நடந்திருக்கின்ற ஊழல்கள் குறித்து, தகவல் அறியும் உரிமை சட்டத்தில், டேனியல் ஜேசுதாஸ் என்பவர் பல தகவல்களை வாங்கி அப்போதே வெளிப்படுத்தியிருக்கிறார். 

25 கிலோ கொண்ட சுண்ணாம்பு பவுடர், தனியார் கடைகளில் 170 ரூபாய்க்கு கிடைக்கிறது. ஆனால், 842 ரூபாய் கொடுத்து வாங்கி இருக்கிறார்கள். பினாயில் ஒரு பாட்டில் 20 ரூபாய்க்கு கடையில் கிடைக்கிறது. அதை 130 ரூபாய்க்கு வாங்கி இருக்கிறார்கள். சாக்கடை அடைப்பை சரி செய்யும் டிச்சு கொத்து, அதோட விலை 130 ரூபாய். ஆனால் அதை 1,010 ரூபாய்க்கு வாங்கி இருக்கிறார்கள். 1,500 ரூபாய் மதிப்புள்ள மோட்டாரை, 29 ஆயிரத்து 465 ரூபாய் கொடுத்து வாங்கி இருக்கிறார்கள். 

1,712 ரூபாய் மதிப்பிலான காப்பர் வயரை, 8,429 ரூபாய் கொடுத்து வாங்கி இருக்கிறார்கள். 870 ரூபாய் மதிப்பிலான லைட் ஃபிட்டிங்கை, 2,080 ரூபாய் கொடுத்து வாங்கி இருக்கிறார்கள். இவ்வாறு பொருட்கள் வாங்குவதில் மட்டும் ஒரு ஊராட்சிக்கு 1 கோடி ரூபாய் கொள்ளை அடித்திருக்கிறார்கள். 

தமிழ்நாடு முழுவதும் இருக்கின்ற 12 ஆயிரம் ஊராட்சிகளில், மொத்தம் 12 ஆயிரம் கோடி ரூபாய் அரசாங்கப் பணத்தை சுருட்டி இருக்கிறார்கள். இதையெல்லாம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலமாக, டேனியல் ஜேசுதாஸ் அம்பலப்படுத்தி இருக்கிறார். இந்தக் குற்றச்சாட்டுக்கு அன்று அமைச்சராக இருந்த வேலுமணி பதில் சொல்லவில்லை. சொல்லக்கூடிய காலம் ரொம்ப தொலைவில் இல்லை.அதிமுக ஆட்சியில் இருந்தபோதே, நம்முடைய அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, பல்வேறு ஆதாரங்களோடு லஞ்ச ஒழிப்புத்துறையில் மனு கொடுத்தார். சென்னை உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தாக்கல் செய்தார்.

தன்னைப் பற்றி எழுதவே கூடாது என்று மகாயோக்கியரைப் போலக் கூச்சலிட்டவர்தான் வேலுமணி. இதையெல்லாம் உள்ளாட்சி அமைப்புகளோட பிரதிநிதிகள் கேள்வி கேட்பார்கள் என்று உள்ளாட்சித் தேர்தலையே நடத்தாமல் இருந்தார்கள்.

நான் சொன்னது ஒரே ஒரு எடுத்துக்காட்டுதான். இப்படி, சென்னை மாநகராட்சியாக இருந்தாலும், மதுரை மாநகராட்சியாக இருந்தாலும், நகராட்சி அமைப்புகளாக இருந்தாலும் அதிமுக ஆட்சியில் மலையளவு ஊழல்கள் செய்யப்பட்டன. இது எல்லாம் லஞ்ச ஒழிப்பு போலீசார் வசம், அவர்கள் ஆட்சியில் இருந்தபோதே அனுப்பி வைக்கப்பட்டு விட்டன. 

இப்போது திமுக ஆட்சியில் அதுபற்றி விரிவாக விசாரணை நடத்தி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டிருக்கிறது. சென்னை மாநகராட்சி ஒப்பந்தத்தில் 464 கோடி ரூபாய் ஊழல் செய்ததாக முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. கோவை மாநகராட்சி திட்டப்பணிகளுக்கான ஒப்பந்தத்தில் 346 கோடி ரூபாய் ஊழல் செய்திருக்கிறதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 
எஸ்.பி.வேலுமணி மற்றும் அவருடைய உறவினர்களுக்குச் சொந்தமான நிறுவனங்களுடைய வருவாய், சில ஆண்டுகளில் மட்டும் பலமடங்கு உயர்ந்திருக்குறது என்று லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்திருக்கிற முதல் தகவல் அறிக்கையில் தெரியவந்திருக்கிறது. 
கடந்த 2014 முதல், அனைத்து ஒப்பந்தங்களையும் தன்னோட குடும்ப உறுப்பினர்களுக்கோ அல்லது தன்னோட பினாமிகளுக்கோ மட்டுமே கொடுத்திருக்கிறார் வேலுமணி என்று ஆதாரப்பூர்வமாகத் தெரியவந்திருக்கிறது. 

இவர்களுக்கு சென்னை, கோவை மாநகராட்சிப் பணிகள் அனைத்தும் விதிமுறைகளை மீறித்தரப்பட்டிருக்கிறது. இதனுடைய மதிப்பு 811 கோடி ரூபாய். தமிழ்நாடு முழுவதும் 23 லட்சத்து 72 ஆயிரத்து 412 தெருவிளக்குகளில் எல்.இ.டி. விளக்குகளாக மாற்றுகிற திட்டத்தை செயல்படுத்தியதில் முறைகேடு செய்ததாக வேலுமணிக்கு எதிராக, இப்போது பேரவைத் தலைவராக இருக்கின்ற அப்பாவு புகார் அளித்திருந்தார்.

இதுதான் அதிமுக ஆட்சியில் உள்ளாட்சி அமைப்புகள் செயல்பட்ட லட்சணம். இதே மாதிரி மீண்டும் ஊழல் சாம்ராஜ்யத்தை நடத்த முடியுமா என்ற ஏக்கத்தோடுதான் தினம் ஒரு பொய் நிகழ்ச்சியை, காமெடியாக நடத்திக் கொண்டு இருக்கிறார் பச்சைப் பொய் பழனிசாமி. அதிமுகவுக்கு அளிக்கிற வாக்கு என்பது ஊழலுக்கு அளிக்கும் வாக்கு. லஞ்ச லாவண்யத்துக்கு அளிக்கின்ற வாக்கு. அராஜகங்களுக்கு அளிக்கின்ற வாக்கு. இதைத் தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் தெளிவாக உணர்ந்திருக்கிறார்கள். 

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமது பிரச்சாரத்தின்போது குறிப்பிட்டுள்ளார்.

Similar News