உள்ளூர் செய்திகள்
ஓட்டு எந்திரம் வைக்கும் அறைக்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு
ஓட்டு எண்ணும் மையத்தில் தேர்தல் மேற்பார்வையாளர் நேரில் ஆய்வு
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெறவுள்ள நகர்ப்புற தேர்தல் ஓட்டுப்பதிவினை எண்ணும் மையத்தில் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகளை தேர்தல் மேற்பார்வையாளர் ரத்னா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான ஓட்டு எண்ணும் மையம் அமைக்கப்பட்டுள்ள எறையூர் மகாத்மா பப்ளிக் பள்ளியில்
பெரம்பலூர் மாவட்ட தேர்தல் மேற்பார்வையாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, இயக்குநருமான ரத்னா மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான ஸ்ரீவெங்கட பிரியா ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பின்னர் கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா , பெரம்பலூர் மாவட்டத்தில் ஒரு நகராட்சி, 4 பேரூராட்சிகளுக்கு மொத்தம் 112 ஓட்டுசாவடிகளில் தேர்தல் நடைபெற உள்ளது.
இதில் பூலாம்பாடி 6,11 வது வார்டில் வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதால் அங்கு தேர்தல் நடைபெறவில்லை. மீதமுள்ள 110 ஓட்டுச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு நடைபெறும்,
தேர்தல் முடிந்தவுடன் இந்த அனைத்து ஓட்டுப்பதிவு இயந்திரங்களும் எறையூர் மகாத்மா பப்ளிக் பள்ளிக்கு கொண்டு வரப்பட்டு பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு சீல் செய்யப்பட்டு 3 அடுக்கு காவல் பாதுகாப்பு போடப்படும்.
பின்னர் 22ம்தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறும். மாநில தேர்தல் ஆணையம் வகுத்துள்ள விதிமுறைகளை பின்பற்றி ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் என தெரிவித்தார்.
ஆய்வின்போது நகராட்சி பொறியாளர் மனோகர், லப்பைக்குடிக்காடு பேரூராட்சி செயல் அலுவலர் சதீஸ்கிருஷ்ணன், மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்