உள்ளூர் செய்திகள்
பெண் உடலில் தீ வைத்த மாமியார் கைது
சிவகாசி அருகே மருமகளை தீ வைத்து எரித்த மாமியார் கைது செய்யப்பட்டார்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் போலீஸ் சரகத்துக்குட்பட்ட செங்க மலநாச்சியார்புரத்தை சேர்ந்தவர் ஜோதிமணி. இவரது மனைவி கார்த்தீஸ்வரி. இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகிறது. தற்போது கார்த்தீஸ்வரி கர்ப்பிணியாக உள்ளார்.
ஜோதிமணியின் தாயார் சின்னத்தாய்(45) புதுப்பட்டியில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் வேலைக்கு செல்லும்போது மருமகள் கார்த்தீஸ்வரியை வீட்டுக்குள் வைத்து கதவை பூட்டி சென்று விடுவாராம்.
மேலும் அடிக்கடி கார்த்தீஸ்வரியை சித்ரவதை செய்ததாகவும் தெரிகிறது. இதுகுறித்து தனது சகோதரி மாரீஸ்வரியிடம் தெரிவித்த கார்த்தீஸ்வரி தன்னை வீட்டுக்கு அழைத்து செல்லும்படியும் கூறி உள்ளார்.
இந்தநிலையில் சம்பவத்தன்று அவர் கடைக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பினார். அப்போது சின்னத்தாய் எங்கு சென்று வருகிறாய் என அவதூறாக பேசி உள்ளார். இதனால் மனவேதனை அடைந்த கார்த்தீஸ்வரி மாடிக்கு சென்றார்.
அப்போது பின்னால் வந்த சின்னத்தாய் அவரை தாக்கியதோடு மண்எண்ணை ஊற்றி தீ வைத்ததாகவும் கூறப்படுகிறது. கார்த்தீஸ்வரியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆம்புலன்சு மூலம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து மாரீஸ்வரி கொடுத்த புகாரின்பேரில் திருத்தங்கல் போலீசார் சின்னத்தாய், ஜோதிமணி மீது வழக்குப்பதிவு செய்தனர். இதில் சின்னத்தாய் கைது செய்யப்பட்டார்.