உள்ளூர் செய்திகள்
தியாகதுருகம் அருகே வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் ஆய்வு
தியாகதுருகம் அருகே கோடை காலங்களில் தண்ணீர் பிரச்சினை ஏற்படாமல் இருக்க இந்த பகுதியில் உள்ள ஏரி, குளம், குட்டை உள்ளிட்ட நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே புது உச்சிமேடு மற்றும் உடையனாச்சி ஆகிய ஊராட்சிகளில் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு மேற்கொண்டார்.
இதில் தியாகதுருகம் அருகே புது உச்சிமேடு ஊராட்சியில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின்கீழ் வீடு கட்டும் பணிகளையும், புதியதாக கட்டப்பட்டு வரும் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் கட்டும் பணி மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணி ஆகியவற்றை ஆய்வு மேற்கொண்டார். அப்போது பணிகளை தரமாக, விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.
இதனை தொடர்ந்து உடையநாச்சி ஊராட்சியில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின்கீழ் வீடு கட்டும் பணி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தின்கீழ் ரூ.12.25 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் சமுதாய கிணறு அமைக்கும் பணி ஆகியவற்றை ஆய்வு மேற்கொண்டார். அப்போது பணிகளை உரிய காலத்திற்குள் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும்.
மேலும் கோடை காலங்களில் தண்ணீர் பிரச்சினை ஏற்படாமல் இருக்க இந்த பகுதியில் உள்ள ஏரி, குளம், குட்டை உள்ளிட்ட நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
ஆய்வின்போது ஊராட்சிகள் உதவி இயக்குநர் ரெத்தினமாலா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செந்தில் முருகன், இந்தி ராணி மற்றும் உதவி பொறியாளர்கள் ஜெயப்பிரகாஷ், கோபி உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் உடனிருந்தனர்.