உள்ளூர் செய்திகள்
சுயேட்சை வேட்பாளர் போட்டியின்றி தேர்வு
நாகை நகராட்சியில் முதல் முறையாக நம்பியார் நகர் சுயேட்சை வேட்பாளரான மீனவர் சுரேஷ் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
நாகப்பட்டினம்:
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நாகப்பட்டினம் நகராட்சியில் 36 வார்டுகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டு வேட்புமனு தாக்கல் நடைபெற்றது. இதில் 16வது வார்டு நம்பியார்நகர் பகுதியில் மீனவர் சுரேஷ் மட்டும் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
அவரை எதிர்த்து யாரும் போட்டியிடாததால் சுரேஷ் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
தொடர்ந்து வெற்றி பெற்றதற்கான சான்றிதழை சுரேசுக்கு நகராட்சி ஆணையரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான ஸ்ரீதேவி வழங்கினார்.
இதனையடுத்து நம்பியார்நகர் கிராம மக்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மாலை அணிவித்தும், பட்டாசு வெடித்தும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகை நகராட்சியில் சுயேட்சை வேட்பாளர் ஒருவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.