உள்ளூர் செய்திகள்
சீமான்

தமிழக மீனவர்கள் மீது திட்டமிட்டு பழிபோடுவதா?- இலங்கை அரசுக்கு சீமான் கண்டனம்

Published On 2022-02-08 06:17 GMT   |   Update On 2022-02-08 06:17 GMT
தமிழர் ஓற்றுமையையும், இணக்கத்தையும் கடைபிடிக்க வேண்டுமென இரு நிலத்தில் வாழும் தமிழர்களையும் உள்ளன்போடும், உரிமையோடும் கேட்டுக்கொள்வதாக சீமான் கூறியுள்ளார்.
சென்னை:

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

யாழ்ப்பாணம் மாவட்டம், சுப்பர்மடம் கடற்பகுதியில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவ தம்பிகள் தணிகைமாறன், பிரேம்குமார் ஆகியோர் படகு கவிழ்ந்து உயிரிழந்த செய்தியறிந்து பெரும் வேதனையடைந்தேன். தம்பிகளை இழந்து வாடும் அவர்தம் பெற்றோர்களுக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

அது விபத்துதானே ஒழிய, திட்டமிடப்பட்டத் தாக்குதல் அல்ல, தமிழக மீனவர்கள் தொப்புள்கொடி உறவுகளான ஈழத்துச்சொந்தங்களை ஒருநாளும் பகையாளியாகக் கருதவோ, தாக்குதல் தொடுத்திடவோ மாட்டார்கள்.

அதேநேரத்தில், இம்மரணத்தைத் துருப்புச் சீட்டாகப் பயன்படுத்தி, ஈழத்து மீனவர்களுக்கும், தமிழக மீனவர்களுக்குமிடையே சண்டை மூட்டிவிட்டு, வேடிக்கைப் பார்க்கும் சிங்கள அதிகார வர்க்கத்தின் செயல்களுக்குப் பலியாகாது விழிப்போடும், தெளிவோடும் இருக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.

தமிழகத்து மீனவர்கள்தான் ஈழ மீனவர்களைத் தாக்கிக் கொன்றுவிட்டார்கள் என அந்நிலத்தில் பரப்புரைசெய்வதும், தமிழகத்து மீனவர்களது படகுகளை ஈழத்து மீனவர்களுக்கு ஏலத்தில் விற்று, காழ்ப்புணர்வை தமிழக மீனவர்களிடம் உருவாக்க முயல்வதுமான போக்குகள் சொந்த ரத்தங்களுக்குள்ளே யுத்தத்தை நிகழ்த்த துடிக்கும் பெரும் மோசடித்தனமாகும்.

ஆகவே, தமிழகத்து மீனவர்களுக்கும், ஈழத்து மீனவர்களுக்குமிடையே பிளவையும், பகையையும் உருவாக்கத் துடிக்கும் இனவெறி சிங்கள ஆட்சியாளர்களின் தமிழர் விரோதச் செயல்பாடுகளுக்கு இரையாகாது அவர்களது உள்நோக்கத்தைப் புரிந்துகொண்டு, தமிழர் ஓற்றுமையையும், இணக்கத்தையும் கடைபிடிக்க வேண்டுமென இரு நிலத்தில் வாழும் தமிழர்களையும் உள்ளன்போடும், உரிமையோடும் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News