உள்ளூர் செய்திகள்
திட்டக்குடி அருகே வேகத்தடை அமைக்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
திட்டக்குடி அருகே வேகத்தடை அமைக்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
திட்டக்குடி:
திட்டக்குடி விருத்தாசலம் மாநில நெடுஞ்சாலையின் ஓரம் அமைந்துள்ள சத்தியவாடி கிராமத்தில் இரவு நேரங்களில் அடிக்கடி வாகன விபத்து ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுகிறது.
தற்போது மேலும் அப்பகுதியில் சிறிய சிறிய பாலங்கள் அமைத்துள்ளனர். அந்தப் பாலம் அதிக உயரமாக உள்ளதால் பாலத்தின் மட்டத்திற்கு தார் சாலை அமைக்காமல் உள்ளதால் இரவு நேரங்களில் இருசக்கர வாகனம் மற்றும் கனரக வாகனங்கள் செல்வோர் எதிர்பாராத விதமாக விபத்து ஏற்படுகிறது.
இதை தடுக்கும் வகையில் பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் வேகத்தடை அமைக்க கோரி கிராம மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியும் மாவட்ட நிர்வாகம் இது வரை செவிசாய்க்காமல் இன்றுவரை அவ்விடத்தில் வேகத்தடை அமைத்து தராமல் உள்ளனர். நேற்று இரவு அவ்வழியே இருசக்கர வாகனத்தில் சென்றவர்களுக்கு விபத்து ஏற்பட்டுள்ளது.
ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் ஒன்று சேர்ந்து நேற்று இரவு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் திட்டக்குடி விருத்தாசலம் மாநில நெடுஞ்சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்படைந்தது .
இதுகுறித்து தகவலின்பேரில் வந்த கருவேப்பிலங்குறிச்சி போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரியிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.