உள்ளூர் செய்திகள்
கைது

கல்லூரி மாணவியிடம் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி- 2 பேர் கைது

Published On 2022-02-06 17:16 IST   |   Update On 2022-02-06 17:16:00 IST
கள்ளக்குறிச்சியில் கல்லூரி மாணவிடம் வேலை வாங்கி தருவதாக கூறி பணத்தை ஏமாற்றிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி நேபால் தெருவை சேர்ந்தவர் சுரேஷ். கார் டிரைவர். அவரது மகள் சவுந்தர்யா (வயது 20). கள்ளக்குறிச்சி அரசு கலைக்கல்லூரியில் பி.ஏ. 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.

கொரோனா ஊரடங்கு காரணமாககார் டிரைவர் சுரேசுக்கு சரியாக வேலை கிடைக்காததால் சவுந்தர்யா வேலைக்கு செல்ல முடிவு செய்தார்.

அதன்படி கள்ளக்குறிச்சியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி முன்பு வேலைக்கு ஆட்கள் தேவை என போஸ்டர் ஒட்டப்பட்டு இருந்தது. அதில் இருந்த செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு தனக்கு வேலை வேண்டும் என கூறியுள்ளார்.

அப்போது செல்போனில் எதிர்முனையில் பேசிய ராஜேஷ் என்பவர் தங்களுடைய ஆதார் கார்டு, போட்டோ, வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு கச்சிராயபாளையம் சாலையில் உள்ள அலுவலக முகவரிக்கு வருமாறு கூறியுள்ளார்.

இதனை நம்பிய கல்லூரி மாணவி அங்கே சென்றார். அப்போது அங்கு இருந்த ராஜேஷ் தன்னை மேலாளர் என்றும், திலீப் குமார் உதவி மேலாளர் என்றும் கூறியதாகவும் மேலும் ரூ. 5 ஆயிரம் கட்டினால் அதற்கு ஏற்றவாறு வீட்டு உபயோக பொருட்களை தருவதாகவும் கூறியுள்ளனர்.

மேலும் இதேபோல் பொருட்களை வாங்க ஆட்களை அழைத்து வந்தால் ஒவ்வொரு நபருக்கும் ரூ. 300 கமி‌ஷன் தருவதாக கூறியுள்ளார். இதனை ஏற்று சவுந்தர்யா ரூ.5000 பணம் கட்டி கட்டி உள்ளார். மறுநாள் பொருட்களை வாங்க அலுவலகத்துக்கு சென்றபோது அலுவலகம் பூட்டப்படும் செல்போன் இணைப்பு துண்டிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்தவர் செய்வதறியாது திகைத்து போனார்.

கடந்த 3-ந் தேதி கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் வேலைக்கு ஆட்கள் தேவை என போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது.

இதனை பார்த்து தன்னை ஏமாற்றிய நபர்களாக இருக்கலாம் சந்தேகம் அடைந்த அவர் அதிலிருந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசினார்.

அப்போது எதிர்முனையில் பேசியவர் கள்ளக்குறிச்சி தனியார் விடுதியில் கூட்டம் நடைபெறுவதாக கூறியுள்ளனர். இந்நிலையில் கூட்டத்திற்கு சென்றபோது அங்கே ஏற்கனவே தன்னிடம் பணம் வாங்கி ஏமாற்றிய ராஜேஷ் மற்றும் திலீப்குமார் இருந்தது தெரியவந்தது.

அவர்களிடம் ஏற்கனவே என்னிடம் பணம் வாங்கி கொண்டு எனக்கு பொருட்களை தராமல் ஏமாற்றி விட்டீர்கள் என கூறி வாக்குவாதம் செய்துள்ளார்.

தொடர்ந்து எனது பணத்தை கொடுக்க வேண்டும் இல்லை என்றால் நான் போலீஸ் நிலையத்தில் புகார் அளிப்பேன் எனவும் கூறியுள்ளார். இதனால் பதட்டம் அடைந்த அவர்கள் நாளை வாருங்கள் பணம் தருகிறேன் என கூறினர்.

மீண்டும் அடுத்த நாள் சென்று பார்த்தபோது தனியார் விடுதியில் அறையை காலி செய்து விட்டு சென்று விட்டனர். இதுகுறித்து சவுந்தர்யா கள்ளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அதன்படி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்தனர். விசாரணையில் தியாகதுருகம் அருகே பெரிய மாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ராஜேஷ் (31) மற்றும் சேலம் அம்மாபேட்டை பகுதியைச் சேர்ந்த திலீப் குமார் (22) என்பதும், இவர்கள் இந்தப் பெண்ணிடம் பணம் வாங்கி கொண்டு பொருட்களை தராமல் ஏமாற்றியதும் தெரிய வந்தது.

போலீசார் 2 பேரையும் கைது செய்து கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். கள்ளக்குறிச்சியில் கல்லூரி மாணவிடம் வேலை வாங்கி தருவதாக கூறி பணத்தை ஏமாற்றிய சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News