உள்ளூர் செய்திகள்
கோவையில் உடல்நலக்குறைவால் அவதிப்படும் பெண் யானை
யானைக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்
கவுண்டம்பாளையம்:
கோவை மாவட்டம் கணுவாய் அடுத்துள்ள ஆனைகட்டி சாலை பெரியதடாகம் அருகே அனுவாவி சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது.
இந்த கோவிலுக்கு செல்லும் வழியில் பெண் காட்டு யானை ஒன்று வெகுநேரமாக படுத்து கிடந்தது. இதை பார்த்த அப்பகுதி மக்கள் சம்பவம் குறித்து, வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவல் அறிந்ததும் கோவை ரேஞ்சர் அருண் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்றனர். அங்கு சென்று யானையை பார்வையிட்டனர். அப்போது யானைக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
உடனடியாக கால்நடை டாக்டர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. கால்நடை டாக்டர்கள் மற்றும் வனத்துறையினர் இணைந்து யானைக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், நீர்ச்சத்து குறைபாடு காரணமாக யானையின் உடல்நிலை மோசமாகி நடக்கமுடியாமல் கீழே விழுந்துள்ளது. யானைக்கு தொடர்ந்து குளுக்கோஸ் மற்றும் மருந்துகளை செலுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றனர்.