உள்ளூர் செய்திகள்
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வேட்புமனு ஏற்க மறுப்பு
வாக்காளர் மெக்கானிக் கையெழுத்தை போலியாக போட்டு முன்மொழி கடிதம் கொடுத்ததாக கூறி நாகை நகராட்சி 33&வது வார்டில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம்:
நாகை நகராட்சி 33-வது வார்டில் நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிட ரவி என்பவர் வேட்பு மனு தாக்கல் செய்தார். அவர் வழங்கிய ஆவணங்களில் முன்மொழி கடிதத்தில் அதே பகுதியை சேர்ந்த வாக்காளர் கார்த்திக் என்பவரின் கையெழுத்திட்டு வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்நிலையில் நேற்று நாகை நகராட்சி அலுவலகத்தில் வேட்பு மனு பரிசீலனை நடைபெற்றது. அப்போது நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ரவியின் மனுவை ஆய்வு செய்த அதிகாரிகள், முன் மொழி கடிதம் கொடுத்த மெக்கானிக் கார்த்திக்கை தொடர்புகொண்டு பேசியபோது அவர் தான் யாருக்கும் எந்த கடிதமும் கொடுக்கவில்லை, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் யார் என்றே தெரியாது, என்று கூறியுள்ளார்.
இதையடுத்து மெக்கானிக் உடையோடு அலுவலகத்துக்கு வந்த கார்த்திக் அதிகாரிகளிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். வாக்காளருக்கே தெரியாமல், அவருடைய முகவரி, கையெழுத்துடன் முன்மொழி கடிதம் கொடுத்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ரவியின் வேட்புமனுவை தேர்தல் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஏற்க மறுத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.