உள்ளூர் செய்திகள்
FILEPHOTO

வெள்ளந்தாங்கி அம்மன் கோவிலில் கொள்ளை

Published On 2022-02-06 11:22 IST   |   Update On 2022-02-06 11:22:00 IST
வெள்ளந்தாங்கி அம்மன் கோவிலில் நடந்த கொள்ளை சம்பவத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூர்:
-
பெரம்பலூர் தேரடி வீதி கடைசியில் இந்து சமய அறநிலையத்துறை மற்றும் பரம்பரை அறங்காவலர் கட்டுப்பாட்டில் வெள்ளந்தாங்கி அம்மன் கோவில் உள்ளது.

இந்த கோவிலில் சம்பவத்தன்று இரவு வழக்கம் போல் பூசாரி சிதம்பரம், பூஜையை முடித்து கொண்டு, பின்னர் கோவிலை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். காலை அவர் மீண்டும் கோவிலுக்கு வந்தார்.

அப்போது கோவிலின் வருடாபிஷேக விழா நாளை (திங்கட் கிழமை) நடைபெற இருப்பதால் கோவிலின் பித்தளை பொருட்களை சுத்தம் செய்யலாம் என்று எண்ணிய சிதம்பரம், கோவிலின் மெயின் கேட்டை திறந்து உள்ளே சென்றார். அப்போது கோவிலின் உள்ளே செல்லும் 2 இரும்பு கேட்டுகளின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

உள்ளே சென்று பார்த்த போது, கோவிலில் இருந்த 15 பெரிய பித்தளை தாம்பூல தட்டுகள், 3 பித்தளை குடங்கள், 5 தீர்த்த கோல், 3 அடி உயரம் கொண்ட பித்தளை குத்து விளக்கு ஒன்று மற்றும் மின்சாதனை பொருட்களான பேட்டரி, யு.பி.எஸ். உள்பட ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் திருட்டு போயிருந்தது.
 
இது குறித்து தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். போலீஸ் மோப்ப நாய் நிஞ்சா வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது. இதற்கிடையே கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்து சென்றனர்.

இச்சம்பவம் தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்மநபர்களை தேடிவருகின்றனர்.

Similar News