உள்ளூர் செய்திகள்
ஒதியம்பட்டில் கிராம நிர்வாக அலுவலகம் அமைக்க வேண்டும்- சிவா எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
ஒதியம்பட்டில் கிராம நிர்வாக அலுவலகம் மீண்டும் இயங்க நடவடிக்கை எடுக்கும்படி கொம்யூன் பஞ்சாயத்து ஆணையரிடம் சிவா எம்.எல்.ஏ. வலியுறுத்தினார்.
புதுச்சேரி:
வில்லியனூர் தொகுதி ஒதியம்பட்டு மெயின் ரோட்டில் வினாயகர் கோவில் அருகில் குடிநீர் வசதிக்காக இயங்கிவந்த ஜெனரேட்டர் 4 ஆண்டாக பழுதடைந்துள்ளது. இதனால் மின்தடை நேரங்களில் குடிநீரின்றி அவதிப்படுவதாகவும், ரேசன் கடை இல்லை என்றும் அப்பகுதி மக்கள் தொகுதி எம்.எல்.ஏ.வும், எதிர்க்கட்சி தலைவருமான சிவாவிடம் முறையிட்டனர்.
இதனையடுத்து சிவா எம்.எல்.ஏ., கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ஆறுமுகம் உள்ளிட்ட அதிகாரிகளை அழைத்து சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பழுதாகி கிடக்கும் ஜெனரேட்டரை பழுதுபார்த்து இயக்கவும், ரேசன் கடை அமைத்துத் தரவும் வலியுறுத்தினார். மேலும் அப்பகுதியில் ஏற்கனவே இயங்கி வந்த கிராம நிர்வாக அலுவலகத்தை மீண்டும் இயங்கச் செய்ய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார். பின்னர் கே.வி.நகர் பகுதிக்குச் சென்று அப்பகுதி மக்களின் கோரிக்கையின்படி ரேசன்கடை, அங்கன்வாடி மையம் கட்டித்தர நடவடிக்கை எடுக்கும்படியும் ஆணையரிடம் வலியுறுத்தினார்.
இந்த நிகழ்ச்சியின்போது தி.மு.க. பொறுப்பாளர்கள் முருகையன், திருவேங்கடம், குலசேகரன், தொகுதி இளைஞரணி அமைப்பாளர் மணிகண்டன், ராமன் மற்றும் கே.வி. நகரைச் சேர்ந்த பாலு, சிலம்பு, நடராஜன், கிருஷ்ணமூர்த்தி, அண்ணா நகர் பாலு ஆகியோர் உடன் இருந்தனர்.