உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்.

சான்றிதழ் வழங்க காலதாமதம்- விவசாயிகள் புகார்

Published On 2022-02-06 09:51 IST   |   Update On 2022-02-06 09:51:00 IST
தண்ணீர் திறக்க கோரிக்கை வைத்தால் மட்டும் அணையில் இருந்து கடைமடைக்கு தண்ணீர் திறக்க வேண்டும்.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் காணொளி மூலம்  நடந்தது. 

கலெக்டர் அலுவலகத்தில் இருந்தபடி வேளாண் இணை இயக்குனர் மனோகர், விவசாயிகளிடம் பேசினார். உதவி இயக்குனர் அலுவலகங்களில் இருந்தபடி  விவசாயிகள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி பேசினர். 

மங்கலம் கிராம நீரினை பயன்படுத்தும் பாசன விவசாயிகள் நலசங்க தலைவர் பொன்னுசாமி பேசுகையில், 

திருப்பூர் தெற்கு தாலுகாவில், 16 வருவாய் கிராமங்கள் உள்ளன. சொத்துரிமை சான்று, நில உட்பிரிவு, நில உரிமை சான்று, தரிசு நில சான்று, வாரிசு சான்று போன்ற சான்றிதழ்கள் நீண்ட நாட்களாக வழங்கப்படாமல் உள்ளன. வி.ஏ.ஓ., - ஆர்.ஐ., அறிக்கை அளித்த பிறகும் கிடப்பில் போட்டு வைக்கின்றனர். தாசில்தார் இதுகுறித்து கண்டுகொள்வதில்லை. 

எனவே தாலுகா அலுவலகத்தை ஆய்வு செய்து பணிகளை முறைப்படுத்த வேண்டும். இடுவம்பாளையம் மின் பொறியாளர் அலுவலகத்தில் உள்ள  சின்னாண்டிபாளையம், குளத்துப்புதூர் இணைப்புகளை ஆண்டிபாளையம் அலுவலகத்துடன் இணைக்க வேண்டும்.

தமிழக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க தலைவர் காளிமுத்து பேசுகையில், 

தாராபுரம், வடுகபாளையம் கிராமத்தில் அனுமதியின்றி அமைக்கப்படும் பாக்குமட்டை தொழிற்சாலை இயங்க அனுமதி வழங்க கூடாது. தகுதியான விவசாயிகளின் பயிர்க்கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். உப்பாறு அணையில் வாய்க்கால்களை தூர்வாரி தயார்நிலையில் வைக்க வேண்டும். 

தண்ணீர் திறக்க கோரிக்கை வைத்தால் மட்டும் அணையில் இருந்து கடைமடைக்கு தண்ணீர் திறக்கவேண்டும் என்றார். 

Similar News