உள்ளூர் செய்திகள்
ஆக்சிஜன் தேவை இல்லாததால் அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ள அனுமதி
தொற்று உறுதியாகும் நோயாளிகளில் 4 சதவீதம் பேர் மட்டுமே தற்போது மருத்துவமனையில் உள்ளனர்.
திருப்பூர்:
கடந்தாண்டு கொரோனா இரண்டாவது அலை வேகமெடுத்த போது தமிழகத்தில் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டது.
அவசரமில்லாத அறுவை சிகிச்சைகளை மருத்துவமனைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்க மருத்துவ சேவைகள் துறை அறிவுறுத்தியது.
அரசு, தனியார் மருத்துவமனைகளில் 50 சதவீத படுக்கைகள் கொரோனா நோயாளிகளுக்கு ஒதுக்கப்பட்டது. சாதாரண நோயாளிகள் அனுமதிப்பது தவிர்க்கப்பட்டது. கடந்தாண்டு ஆகஸ்டு மாதத்துக்கு பின் கொரோனா குறைந்ததால் அறுவை சிகிச்சைக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
இந்தாண்டு ஜனவரி முதல் வாரத்தில் கொரோனா தமிழகத்தில் வேகமெடுத்ததால் மீண்டும் அவசியமில்லாத அறுவை சிகிச்சையை தற்காலிகமாக நிறுத்தி வைக்க உத்தரவிடப்பட்டது. ஆனால் தற்போது கொரோனா குறைய துவங்கியுள்ளது.
இதுகுறித்து திருப்பூர் மாவட்ட மருத்துவத்துறை அதிகாரிகள் கூறுகையில்,
தொற்று உறுதியாகும் நோயாளிகளில் 4 சதவீதம் பேர் மட்டுமே தற்போது மருத்துவமனையில் உள்ளனர்.
ஆக்சிஜன் தேவைப்படும் நிலையில் இருப்பவர் சொற்பம் தான் என்பதால் பிப்ரவரி முதல் வாரத்தில் இருந்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் வழக்கம் போல் அறுவை சிகிச்சை தொடரலாம்.
சாதாரண நோயாளிகளை அனுமதித்து சிகிச்சை வழங்கலாம் என அனுமதிக்கப்பட்டுள்ளது என்றனர்.