உள்ளூர் செய்திகள்
தெருநாய்களை கட்டுப்படுத்த நகராட்சிக்கு பொதுமக்கள் கோரிக்கை
ராஜபாளையத்தில் தெருநாய்கள் 8 பேரை கடித்தது. அவற்றின் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
ராஜபாளையம்
ராஜபாளையத்தில் தெருநாய்களின் எண்ணிக்கை சமீபகாலமாக அதிகரித்துவிட்டது. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நாய்களை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் சார்பில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதன் காரணமாக தெருக்களில் இருசக்கர வாகனங்களில் செல்வோர், நடந்து செல்பவர்கள் போன்றோரை நாய்கள் விரட்டி விரட்டி கடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பெரிய மாரியம்மன் கோவில் தெரு, தென்காசி சாலை, சஞ்சீவிநாதபுரம் தெரு, செவல்பட்டி தெரு, பஞ்சு மார்க்கெட், டி.பி.மில்ஸ் ரோடு போன்ற பகுதிகளில் நாய்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது.
இந்தநிலையில் பெரிய மாரியம்மன் கோயில் அருகே சென்று கொண்டிருந்த மாணவன் முத்துசரவணனை தெருநாய்கள் துரத்தி துரத்தி கடித்துள்ளது. இதில் தோள்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டு முத்துசரவணன் ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
தொடர்ந்து தாமோதரன், நகராட்சி துப்புரவு ஊழியர் கருப்பாயி, அவரது உறவினர் தமிழ்ச்செல்வி உள்பட 8 பேரை தெரு நாய்கள் கடித்ததால் படுகாயம் அடைந்தனர். அனைவரும் ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்கள்.
ராஜபாளையம் நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் பழனிகுரு, காளி ஆகியோர் தலைமையில் துப்புரவு ஊழியர்கள் நாய்களை பிடித்து ராஜபாளையம் அரசு கால்நடை மருத்துவமனையில் ஒப்படைத்துள்ளனர்.
இதற்கிடையில் 4 மாடுகளையும் நாய்கள் கடித்துள்ளன. பாதிப்படைந்த மாடுகளும் அரசு கால்நடை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது. விரைவில் ராஜபாளையம் நகராட்சி நிர்வாகம் தெருநாய்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட வேண்டும் என பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.