உள்ளூர் செய்திகள்
கலெக்டர் பரிசு வழங்கிய காட்சி.

அரியலூரில் கால்நடை சுகாதார மருத்துவ விழிப்புணர்வு முகாம்

Published On 2022-02-04 13:41 IST   |   Update On 2022-02-04 13:41:00 IST
அரியலூரில் கால்நடை சுகாதார மருத்துவ விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

அரியலூர் :

அரியலூர் மாவட்டத்தில் உள்ள கால்நடைகளின் நலன் காக்கும் வகையில் கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் திருமானூர் ஒன்றியம் வெற்றியூரில் சிறப்பு கால்நடைசுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமில் கால்நடைவளர்ப்பவர்களுக்கு தாது உப்பு கலவையும், சிறந்த கிடேரிக் கன்று வளர்த்த 7 நபர்களுக்கு பரிசுகளையும் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி வழங்கினார்.

முகாமில்,  வெற்றியூர் ஊராட்சி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த மாடு, ஆடு மற்றும் கோழி போன்ற கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தல், செயற்கை முறை கருவூட்டல் செய்தல், குடற்புழு நீக்கம், சினை பரிசோதனை, மலடு நீக்க சிகிச்சை அளித்தல், 

தாது உப்புக் கலவை வழங்குதல், கோமாரி நோய் தடுப்பூசி,  கோழி கழிச்சல்களுக்கான தடுப்பூசி, சிறு அறுவை சிகிச்சை  உள்ளிட்ட பல்வேறு வகையான சிகிச்சைகள் சுமார் 500 கால்நடைகளுக்கு வழங்கப்படுகிறது.   தீவன பயிர்கள் மற்றும் தீவனப்புல் சாகுபடி குறித்து விவசாயி களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

அரியலூர் மாவட்டத்தில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் மொத்தம் 120  முகாம்கள் நடத்தப்படுகிறது.  இச்சிறப்பு முகாம் தொலைதூரத்தில் உள்ள குக்கிராமங்கள் மற்றும் கால்நடை மருத்துவ வசதி கிடைக்காத இடங்களுக்கு கால்நடைகளின் நலன்பேணி காத்திடும் வகையில் இலவசமாக  நடத்தப்படவுள்ளதால் ஏழை, எளிய கால்நடை வளர்ப்போர்  இந்த அரிய வாய்ப்பை  பயன்படுத்திக் கொள்ள வேண்டும். 

மேலும், இம் முகாமினை கால்நடை வளர்ப்பவர்கள் பயன்பெறும் வகையில் சிறந்த முறையில் தொடர்ந்து   நடத்திடவும் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். முகாமில்  கால்நடை பராமரிப்புத்துறை  மண்டல இணை இயக்குநர் ஹமீதுஅலி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Similar News