உள்ளூர் செய்திகள்
வழக்கு பதிவு

விருதுநகரில் அதிக லாபம் தருவதாக கூறி ரூ. 2 கோடி மோசடி- 8 பேர் மீது வழக்கு பதிவு

Published On 2022-02-04 12:36 IST   |   Update On 2022-02-04 12:36:00 IST
விருதுநகரில் அதிக லாபம் தருவதாக கூறி ரூ. 2 கோடி மோசடி செய்த 8 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர்:

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள காக்கிவாடன்பட்டியை சேர்ந்தவர்கள் மாணிக்க வாசகம் (வயது 55), ஜெய லட்சுமி.

உறவினர்களான இவர்கள் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்துள்ளனர். அதில் கூறியிருப்பதாவது:-

கடந்த சில மாதங்களுக்கு முன்பு எங்கள் இருவருக்கும் திருச்சியை சேர்ந்த சாந்தி, சூர்யா, நாரணம்மாள், பாபு, அறிவுமணி, பால்ராஜ், சாகுல் அமீது, இளங்கோ ஆகிய 8 பேர் அறிமுகமானார்கள்.

அவர்கள் திருச்சியில் நிதி நிறுவனம் நடத்தி வருவதாகவும் எங்கள் நிறுவனத்தில் ரூ.10 லட்சம் முதலீடு செய்தால் ரூ.30 லட்சமாக திருப்பித் தருவோம் என ஆசை வார்த்தை கூறினார்கள்.

பலமுறை தொடர்ந்து அவர்கள் வற்புறுத்தியதால் நாங்கள் இருவரும் நகை, சொத்து பத்திரங்களை அடகு வைத்து பல்வேறு தவணைகளில் அந்த கும்பலிடம் ரூ.1 கோடியே 93 லட்சத்து 48 ஆயிரத்து கொடுத்தோம்.

பணத்தைப் பெற்றுக் கொண்டு பல மாதங்களாகியும் அவர்கள் சொன்னபடி எங்களுக்கு லாபத்தில் எதுவும் தரவில்லை. இது தொடர்பாக பலமுறை கேட்டும் உரிய பதில் அளிக்கவில்லை. இதையடுத்து அந்த கும்பலிடம் நாங்கள் கொடுத்த பணத்தை திருப்பித் தருமாறு கேட்டோம். ஆனால் அவர்கள் தரவில்லை.

அவர்கள் கொடுத்த காசோலையும் வங்கியில் பணம் இன்றி திரும்பியது. இதையடுத்து நாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தோம். எங்களிடம் மோசடி செய்த நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து பணத்தை பெற்றுத் தர வேண்டும்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தப் புகாரின் அடிப்படையில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் மேற்கண்ட எட்டு நபர்கள் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News