உள்ளூர் செய்திகள்
கொலை

சிவகங்கை அருகே மதுக்கடை பார் ஊழியர் வெட்டிக்கொலை

Published On 2022-02-04 06:10 GMT   |   Update On 2022-02-04 06:10 GMT
சிவகங்கை அருகே முன்விரோத காரணமாக மதுக்கடை பார் ஊழியர் வெட்டிக்கொலை செய்யப்பட்டரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகங்கை:

சிவகங்கை மாவட்டம் மறவமங்களம் அருகே புரசைவிடுப்பு திறந்தவெளி சிறைச்சாலை அருகே உள்ள வயல்வெளியில் கழுத்தில் வெட்டுக்காயங்களுடன் வாலிபர் ஒருவர் இன்று இறந்து கிடந்தார்.

இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து காளையார்கோவில் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டி தலைமையிலான போலீசார் வந்து விசாரணை நடத்தினர்.

அவரை யாரோ மர்ம நபர்கள் வெட்டிக்கொலை செய்துள்ளனர். கொலை செய்யப்பட்ட வாலிபர் யார்? என்று விசாரணை நடத்தப்பட்டது. அதில் கொலை செய்யப்பட்டவர் மறவமங்கலம் அருகே உள்ள அளியாதிரும்பள் கிராமத்தை சேர்ந்த சின்னயா என்பவரின் மகன் சண்முகம் (வயது35) என்பது தெரியவந்தது.

இவர் கோவையில் உள்ள டாஸ்மாக் மதுபான கடை பாரில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். ஊருக்கு வந்திருந்த இவர் நேற்று இரவு மறவமங்கலம் சாலையில் உள்ள மதுபான கடையில் மது வாங்கி விட்டு மறைவான பகுதியில் அமர்ந்து மது அருந்தியதாக தெரிகிறது.

இந்த நிலையில் மதுபான கடையில் இருந்து சிறிய தூரத்தில் சண்முகம் கொலை செய்யப்பட்டு கிடப்பது இன்று காலை கண்டுபிடிக்கப்பட்டது. சம்பவ இடத்தில் சண்முகத்தின் இருசக்கர வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

கொலை நடந்த இடத்தில் மோப்ப நாய் மற்றும் தடயவியல் நிபுணர்கள் மூலம் சோதனை நடத்தப்பட்டது.இதையடுத்து சண்முகத்தின் உடல் சம்பவ இடத்தில் இருந்து மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

சண்முகத்தை கொலை செய்தது யார்? எதற்காக கொன்றார்கள்? என்பது தெரியவில்லை. இந்த கொலை குறித்து தகவல் அறிந்ததும் சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டார்.

அவர் சண்முகத்தை கொன்ற கொலையாளிகளை விரைவில் பிடிக்க உத்தரவிட்டார். இந்த கொலை சம்பவம் குறித்து காளையார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன்விரோதம் காரணமாக சண்முகம் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

Tags:    

Similar News