உள்ளூர் செய்திகள்
வங்கி மேலாளர் வீட்டில் நகை-பணம் கொள்ளை
விருதுநகரில் வங்கி மேலாளர் வீட்டில் 11 பவுன் நகைகள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
விருதுநகர்
விருதுநகர் முத்துராமலிங்கம் நகரை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன்(வயது 28). அதே பகுதியில் உள்ள அரசு வங்கியில் மேலாளராக பணியாற்றி வருகிறார். நேற்று இவர் வீட்டை பூட்டிவிட்டு தனது குடும்பத்தினருடன் மாசாணி அம்மன் கோவிலுக்கு சென்றிருந்தார்.
அங்கு சாமி கும்பிட்டு விட்டு இரவு ராமகிருஷ்ணன் வீடு திரும்பினார். அப்போது வீட்டு செலவுக்காக பீரோவில் இருந்த பணத்தை எடுக்க முற்பட்டபோது அதில் வைக்கப்பட்டிருந்த 11 பவுன் நகை மற்றும் பணம் திருடு போயிருந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர் இது குறித்து விருதுநகர் மேற்கு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை-பணம் திருட்டு தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர் அருகே உள்ள ஆலங்குளம் பகுதியில் தனியார் நிதி நிறுவனம் உள்ளது. சம்பவத்தன்று இரவு இங்கு புகுந்த மர்மநபர்கள் ரூ.10ஆயிரம் மதிப்புள்ள கம்ப்யூட்டர் மற்றும் பொருட்களை திருடிச்சென்றனர்.
இதுகுறித்து மேலாளர் பொன்ராஜ் கொடுத்த புகாரின்பேரில் ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.