உள்ளூர் செய்திகள்
குண்டர் சட்டத்தில் கைதான கோவிந்தராஜ், ஜான் ஜோசப்.

குட்கா கடத்தல் வழக்கு குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது

Published On 2022-02-03 07:56 GMT   |   Update On 2022-02-03 07:56 GMT
கிருஷ்ணகிரியில் குட்கா கடத்தல் வழக்கில் கைதான 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டம், சென்னை-ஓசூர் தேசிய நெடுஞ்சாலை, கிருஷ்ணகிரி நமாஸ்பாறை அருகே கடந்த 26-ந் தேதி நள்ளிரவில் வேகமாக சென்ற ஈச்சர் லாரியை கிருஷ்ணகிரி போலீசார் மடக்கி பிடித்தனர். அதில் 6.5 டன் குட்கா பொருட்களை பெங்களூரில் இருந்து சென்னைக்கு கடத்தி சென்றது தெரிந்தது. 

இதில் வரட்டனப்பள்ளியைச் சேர்ந்த ஜான் ஜோசப்(வயது30), கிருஷ்ணகிரி மன்னன்(23), ஆகாஷ்(21), யுவராஜ்(20), உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர். பிடிபட்ட குட்கா பொருட்களின் மதிப்பு, 60 லட்ச ரூபாய் ஆகும். கன்டெய்னர் லாரியுடன் குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் குட்கா கடத்தலுக்கு மூளையாக செயல்பட்ட மேலும் சிலரை தேடி வந்தனர்.  

இந்த நிலையில் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட கிருஷ்ணகிரி மோரமடுகு பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ்(32), முருகன்(30), கார்த்தி(23), மவுலி(26), ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் கடத்தல் கும்பலைச் சேர்ந்த சிலரை தொடர்ந்து தேடி வருகின்றனர்.  

இந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ள வரட்டனபள்ளி ஜான் ஜோசப் மற்றும் கிருஷ்ணகிரி மோரமடுகு பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் ஆகிய இருவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட  சாய்சரண் தேஜஸ்வி பரிந்துரை செய்தார். அவரது பரிந்துரையை ஏற்று அவர்கள் இருவரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி உத்தரவிட்டார்.

Tags:    

Similar News