உள்ளூர் செய்திகள்
கொள்ளை நடந்த நகைக்கடை.

திருப்பூர் அருகே நகைக்கடையை உடைத்து பல லட்சம் மதிப்புள்ள நகைகள் கொள்ளை

Published On 2022-02-03 07:33 GMT   |   Update On 2022-02-03 07:33 GMT
பல்லடம் பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கொள்ளை சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. எனவே அதனை தடுக்க போலீசார் இரவு நேரங்களில் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பல்லடம்:

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள காமநாயக்கன்பாளையம் காவல் நிலையம் முன்பு தனியார் நகைக்கடை உள்ளது. நேற்றிரவு வியாபாரம் முடிந்ததும் பணியாளர்கள் கடையை பூட்டி விட்டு சென்றனர்.

இன்று காலை வழக்கம் போல கடையை திறக்க வந்தனர். அப்போது கடையின் பூட்டுகள் உடைக்கப்பட்டு இருந்தது. அதிர்ச்சி அடைந்த உரிமையாளர் மற்றும் பணியாளர்கள் உள்ளே சென்று பார்த்தபோது கடையின் ஷோகேசில் வைக்கப்பட்டிருந்த நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.

உடனே இது குறித்து காமநாயக்கன்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். நேற்றிரவு கடையை பூட்டி விட்டு சென்றதும் நள்ளிரவு மர்மநபர்கள் கடையின் பூட்டை உடைத்து நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். பல லட்சம் மதிப்புள்ள நகைகள் கொள்ளை போயிருக்கலாம் என தெரிகிறது.

சம்பவ இடத்தில் மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் மூலம் சோதனை நடத்தப்பட்டது. மோப்பநாய் கடையில் இருந்து சிறிது தூரம் வரை மோப்ப பிடித்தவாறு சென்று நின்று விட்டது. கைரேகை நிபுணர்கள் அங்கு பதிவாகியிருந்த ரேகைகளை பதிவு செய்தனர்.

நகைக்கடை அருகே காவல்நிலையம் இருந்தும் கொள்ளையர்கள் எந்தவித பயமுமின்றி தங்களது கைவரிசையை காட்டியுள்ளனர். இந்த சம்பவம் பல்லடம் பகுதி பொதுமக்கள், வியாபாரிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பல்லடம் பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கொள்ளை சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. எனவே அதனை தடுக்க போலீசார் இரவுநேரங்களில் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News