உள்ளூர் செய்திகள்
டிடிவி தினகரன்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மக்களை விலைக்கு வாங்கி வெற்றி பெற நினைக்கிறார்கள்- டி.டி.வி.தினகரன்

Published On 2022-02-03 07:32 GMT   |   Update On 2022-02-03 07:32 GMT
ராகுல்காந்தி தமிழகத்தை பற்றி பேசி இருப்பதை வரவேற்கிறேன். ஆனால் நீட் தேர்வு வருவதற்கு தி.மு.க., காங்கிரசே காரணம் என்று அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கூறினார்.
சென்னை:

அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பணத்தை கொடுத்து மக்களை விலைக்கு வாங்கி வெற்றி பெற நினைக்கிறார்கள். தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் அவர்களின் வேலையை காட்ட ஆரம்பித்து விட்டார்கள்.

உள்ளாட்சி தேர்தலிலும் மக்கள் அவர்களை வெற்றி பெற செய்தால் மிகப்பெரிய பேரிடராக அமையும். எனவே நல்ல வேட்பாளர்களை ஓட்டு போட்டு தேர்ந்தெடுங்கள்.

அ.ம.மு.க. சார்பில் நல்ல வேட்பாளர்களை நிறுத்தி உள்ளோம். எனவே அவர்களுக்கு வாக்கு அளியுங்கள். எங்களது கட்சி வேட்பாளர்கள் எல்லா இடங்களிலும் மனுதாக்கல் செய்து வருகிறார்கள். வேட்பு மனு வாபஸ் முடிந்ததும் எத்தனை வேட்பாளர்கள் களத்தில் நிற்கிறார்கள் என்பதை சொல்கிறேன்.

எடப்பாடி பழனிசாமி பற்றி பா.ஜனதாவும், பா.ம.க.வும் மிகவும் தாமதமாக புரிந்து கொண்டுள்ளனர். முன்பே புரிந்திருந்தால் முறைகேடான ஆட்சியை தடுத்திருக்க முடியும்.

இந்தியாவில் தமிழ்நாட்டுக்கு என்று தனி இடம் இருக்கிறது. ராகுல்காந்தி தமிழகத்தை பற்றி பேசி இருப்பதை வரவேற்கிறேன். ஆனால் நீட் தேர்வு வருவதற்கு தி.மு.க., காங்கிரசே காரணம்.

முதல் கையெழுத்திலேயே நீட் தேர்வை தடுத்து நிறுத்துவோம் என்று ஏமாற்றி ஆட்சிக்கு வந்தார்கள். அதனையும் மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News