உள்ளூர் செய்திகள்
FILE PHOTO

பெரம்பலூரில் உரிய ஆவணங்களின்றி எடுத்து செல்லப்பட்ட ரூ. 53.66 லட்சம் பறிமுதல்- பறக்கும் படை அதிரடி

Published On 2022-02-03 11:57 IST   |   Update On 2022-02-03 11:57:00 IST
பெரம்பலூர் அருகே உரிய ஆவணங்களின்றி எடுத்து செல்லப்பட்ட ரூ. 53.66 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
பெரம்பலூர்:

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி பெரம்பலூர் மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்ய வாகனங்களில் பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா? என்பதை கண்டறிய தேர்தல் பறக்கும் படையினர் சுழற்சி முறையில் 24 மணி நேரமும், தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் குரும்பலூர் பேரூராட்சி தேர்தல் பறக்கும் படை அதிகாரியும், தனி சாசில்தாரருமான பழனி செல்வன் தலைமையில் மருவத்தூர் போலீஸ் ஏட்டுகள் கண்ணன், கீதா ஆகியோர் பெரம்பலூர்-துறையூர் சாலையில் பாளையம் பஸ் நிறுத்தம் அருகே தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

 அப்போது அந்த வழியாக சென்ற ஒரு வாகனத்தை அவர்கள் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். அதில் ரூ.53 லட்சம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த வாகனத்தில் இருந்தவர்களிடம், விசாரணை நடத்தியதில், வாகனத்தை ஓட்டி வந்த டிரைவர் அயலூரை சேர்ந்த வேலுசாமி (வயது45) என்பதும்,  அவருடன் வந்தவர் மேலப்புலியூரை சேர்ந்த சின்னமணி(32) என்பதும் தெரியவந்தது. அவர்கள் பெரம்பலூரில் உள்ள ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் இருந்து கும்பலூரில் உள்ள அந்த வங்கியின் ஏ.டி.எம். மையத்துக்கு பணம் நிரப்ப ரூ.53 லட்சத்தை வாகனத்தில் கொண்டு சென்றது தெரியவந்து.

இதே போல் செஞ்சரி சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, பெரம்பலூர் மதனகோபாலபுரத்தை சேர்ந்த ராஜா என்பவர் வந்த மாருதி காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் உரிய ஆவணங்கள் ஏதுமின்றி ரூ.66 ஆயிரத்து 600 இருந்ததை கண்டு பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட 53.66 லட்சத்திற்கான பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் தேர்தல் பறக்கும் படையினர் அந்த பணத்தையும் வாகனத்தையும் பறிமுதல் செய்து குரும்பலூர் பேரூராட்சி செயல் அலுவலரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான மெரிசிடம் ஒப்படைத்தனர். பின்னர் அந்த பணம் மாவட்ட கருவூலத்தில ஒப்படைக்கப்பட்டது.

Similar News